ஸாம்பி பூங்கா விரைவில் !

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸீப்ரோக் என்பவர் 1929-ம் ஆண்டு எழுதிய ‘தி மேஜிக் ஐலேண்ட்’ என்ற புத்தகத்தில் ஸாம்பிகளைப் பற்றி எழுதியிருக்கிறார். இவர்தான் ஸாம்பியை கற்பனையாக உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது.

1932-ம் ஆண்டு விக்டர் ஹெல்ப்ரின் என்பவர் ‘ஒயிட் ஸாம்பி’ என்ற படத்தை இயக்கினார். இதுதான் ஸாம்பிகளைப் பற்றி வெளியான முதல் உலகத் திரைப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்கள் ஸாம்பிகளைப் பற்றிய கற்பனைகளாக உருவாகி வெற்றி பெற்றிக்கின்றன. தமிழ் மொழியில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம்ரவி நடிப்பில் ‘மிருதன்’ என்ற பெயரில் ஸாம்பிகளைப் பற்றிய திரைப்படம் வெளியானது. தமிழ் மொழியில் ஸாம்பிகளைப் பற்றிய முதல் திரைப்படம் இதுதான்.

ஸாம்பிகள் என்பவர்கள், கொடிய நோய் தாக்கத்தினாலோ, நாய்க்கடி போன்ற விஷத்தன்மையின் தாக்கத்தினாலோ பாதிக்கப்பட்டு, மிருகத்தன்மை பெற்றவர்களாக கற்பனை உருவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஸாம்பி’ என்பதை, இறந்த மனிதன் மீண்டும் உயிர்பெற்று வருவதைப் போன்றது என்று வைத்துக்கொள்ளலாம்.

ஸாம்பிகள் ஒன்றை ஒன்றுத் தாக்கிக்கொள்ளாது. அதே நேரத்தில் சாதாரண மனிதனை, ஸாம்பிகள் கடித்தால் அவர்களும் ஸாம்பிகளாக மாறிவிடுவார்கள். இந்த ஸாம்பிகளால் பேச முடியாது. அவைகளுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமாக இல்லை. துப்பாக்கிச் சூடு மூலம் மட்டுமே அவற்றை அழிக்க முடியும் என்பதாக ஹாலிவுட் திரைப்படங்கள் ஸாம்பிகளைப் பற்றி சித்தரித்து வைத்திருக்கின்றன.

திகிலூட்டும் கற்பனை பாத்திரமாக விளங்கும் இந்த ஸாம்பி பெயரில், துபாயில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா உருவாகி வருகிறது என்பது ஆச்சரியமான விஷயமாகும். அதில் மக்களுக்கு திகிலூட்டும், பயமுறுத்தும் அம்சங்கள் அமைய இருக்கின்றன.

துபாயில் உள்ள தேரா தீவுகளில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த தீவில் இரவுச் சந்தைகள் மிகவும் பிரபலம். இரவு சந்தைகள் அமையும் இடத்திலேயே ஸாம்பி பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை நகீல் பொதுத்துறை நிறுவனம் செய்து வருகிறது.

இந்தப் பூங்காவின் வளாகத்தில் அமையவிருக்கும் கடைகள், உணவகங்கள் என அனைத்தும் ஸாம்பிகளின் திரைப்படங்களில் வருவதைப் போல தத்ரூபமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், இரவு சந்தையில் அமைக்கப்பட உள்ளது. இதில் ஸாம்பி பூங்கா மட்டும், சுமார் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாகி வருகிறது. இங்கு 3 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த பூங்காவின் சிறப்பம்சமாக பேய் வீடு, கோடாரியை எரிந்து ஸாம்பிகளை தாக்குவது, வில் வித்தை, வெளியே வர முடியாத திகில் அறை, துப்பாக்கியால் ஸாம்பிகளை சுட்டு வீழ்த்துவது, பார்வையிடும்போது திடீரென்று ஸாம்பிகள் தோன்றி மக்களை தாக்குவது போன்ற காட்சி சித்தரிப்புகள் இடம்பெற உள்ளது. இவை அனைத்தும் மங்கலான வெளிச்சத்திலேயே இருக்கும்படி உருவாக்கப்படுகிறது.

இதுதவிர தப்பிக்கும் அறை, பாட்டில் விளையாட்டுகள், லேசர் காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக இங்குள்ள காபி கடைகள் கூட பயமுறுத்தும் வகைகள் ஸாம்பிகள் வசிக்கும் இடம்போலவே திகிலூட்டும் விதத்தில் அமைக்கப்பட உள்ளது. 2020-ம் ஆண்டின் மத்தியில் இந்த ஸாம்பி பூங்கா மக்களை மிரட்ட, திறந்துவைக்கப்பட இருக்கிறது.