உலக தேனீக்கள் தினம்

ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக கொண்டாடப்படுகிறது.

சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி சொல்லும் உதாரணம், ‘தேனீ மாதிரி உழைக்கணும்’ என்பதாகவே இருக்கும். அப்படி, உழைப்புக்கு முன்னுதாரணம் காட்டப்படும் தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. அதுமட்டுமல்ல, பூக்களில் இருந்து தேனீக்கள் சேகரித்து, தேனடை மூலமாகக் கொடுக்கும் ‘தேன்’, உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தேனீக்களைக் கொண்டாட வேண்டிய தினம் இன்று.

‘தேனீக்கள் அனைத்தும் இப்புவியில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டால், அதன்பின் மனிதன் வாழ்வதற்கு 4 ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது’ என்பார்கள். இதிலிருந்து தேனீக்கள் எந்த அளவுக்கு மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை என்று அறியலாம். தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியப் பங்கு ஆற்றுபவை தேனீக்கள். ஆனால், அவை இன்று அழிந்து வரும் உயிரினமாக மாறிவருவது வேதனைக்குரிய விஷயம்.

தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் .

ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக அறிவித்தனர். அந்தவகையில் 17-ம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர். இந்த நாளில் தேனீக்களின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.

தேனீக்களை எப்படி பாதுகாப்பது என்பதைக் இங்கே காணலாம்

பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணியுங்கள் : பூச்சிக்கொல்லிகளால் நீங்கள் அழிக்க நினைக்கும் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு, சோப், சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.

தேனீக்களின் விருப்பமான மலர்கள் : தேனீக்கள் நுகர்வதற்கு ஏற்ற பூச்செடிகளை வளர்க்க முற்படுங்கள். இதனால் அவை பெருக ஆரம்பிக்கும். தேனீக்களின் வேலையும் இடைவிடாது நடக்கும்.

தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வு : வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அதன் வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள். இதனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் இதைக் கற்றுக்கொண்டு வளர்க்க, பாதுகாக்க முன்வருவார்கள்.