வாஜ்பாயும் அரசியல் வாழ்க்கையும் !

அடல் பிகாரி வாஜ்பாய், டிசம்பர் 25, 1924ல் மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்தார். ஹிந்தி மொழியில் வல்லமை படைத்தவர். திருமணம் செய்துக்கொள்ளாதவர். பல்வேறு கவிதை நூல்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர் வாஜ்பாய். இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பாக, பா.ஜா.க.வின் அதீத வளர்ச்சியில் இவரை தவிர்த்துவிட்டு எந்த தலைவரையும் சொல்லிவிட முடியாது. 1996ம் ஆண்டில்  இந்தியாவின் 10வது பிரதமராக பதவி வகித்த இவரின் முதன்முறை பதவிக்காலம் 13 நாட்கள் மட்டுமே. பின்னர் 1998ல் மீண்டும் பிரதமரானார். ஆனால் இந்த காலகட்டத்தில் 13 மாதங்களே பதவியில் நீடிக்க முடிந்தது.

வாஜ்பாய் தலைமையில் ஆன மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, மறைந்த தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விளக்கிக்கொண்டதால் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து பதவி விலகினார்.

1999ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைத்தார். ஆனால் இந்த முறை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமர் பதவியை அலங்கரித்த பெருமை வாஜ்பாயை சேரும்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆனா பா.ஜா.க. அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. பத்மபூஷன் விருதையும் வாஜ்பாய் பெற்றுள்ளார். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவையில் 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் ( உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், டெல்லி ) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

1974ம் ஆண்டு கட்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுத்து எதிர்த்தவர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் இமயம் முதல் குமரி வரை இணைப்பை ஏற்படுத்தியுள்ள தங்க நாற்கரைச்சாலை திட்டம் திட்டமிடப்பட்டு கொண்டுவரப்பட்டது.

பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் இவரைச் சேரும். இது போன்ற பல சாதனைகளை புரிந்தவர்.

சுதந்திர போராட்ட தியாகி, வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் என பல பதவிகளை வகித்த வாஜ்பாய் அரசியல் நாகரீகத்தின் அச்சானியாய் விளங்கியவர். எதிர்க் கட்சித் தலைவர்களை தன் பக்கம் ஈர்த்து ஒருங்கிணைப்பதில் வாஜ்பாயின் சாதூரியத்தை அறிந்து பா.ஜா.கவினரே பல தருணங்களில் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

1996வது ஆண்டில் பிரதமராக இருந்தபோது, தங்கள் அணிக்கு போதிய பெரும்பாண்மை இல்லை என்பதை உணர்ந்து நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தார். அந்த சமயத்தில் எதிர் தரப்பில் இருந்த உறுப்பினர்களை பணம் கொடுத்து இழுக்க பா.ஜா.க விரும்பவில்லை. இதையடுத்து மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் H.D.தேவகௌடா பிரதமரானார். 1996ல் வாஜ்பாய் 13 நாட்களில் பதவி விலகியதாலேயே பா.ஜா.க மீண்டும் ஆட்சிக்கு வர வித்திட்டது.

தேவகௌடா தலைமையில் ஆன ஆட்சி இரண்டு ஆண்டுகள் கூட தொடர முடியாமல் போனது. கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்னர், வாஜ்பாயின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் அரசியல் வாழ்க்கையில் இருந்து மெல்ல ஒதுங்கிக்கொண்டார். டெல்லியில் உள்ள அவரது வீட்டிலேயே தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார். என்றும் அவரால் நடக்க இயலவில்லை. படுத்தப்படுக்கையாக இருந்த வாஜ்பாய்க்கு சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தது. இதனால் வீட்டிலேயே முடங்கி இருந்தார். தொடர்ந்து உடல்நலம் குறைவால் அவதிப்பட்ட வாஜ்பாய் கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஜூன் 16ம் தேதி அவரின் உயிர் பிரிந்தது.

உலக அளவில், மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கொண்டு திகழும் இந்தியாவில் அரசியல் பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் பெருமை சேர்த்தவர் வாஜ்பாய் என்றால் மிகையாகாது. இந்தியா உள்ளவரை, பா.ஜா.க உள்ளவரை வாஜ்பாய் என்ற மாமனிதர்க்கு எப்போதும் தனித்த இடமுண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.