சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றன. ஆகஸ்ட் 15 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்ட நாயகன் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி தேசிய அளவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெறும்.
பள்ளிச் செயலர் கவிதாசன் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசுகையில்: விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் இருக்கும். வெற்றி, தோல்வி என்பது நிலையானது அல்ல. வாழ்க்கையில் மற்றவர்களுக்காக சேவை செய்கின்ற மனப்பான்மையுடன் வாழ வேண்டும். எல்லோரையும் மதிக்கின்ற பண்பு இருக்க வேண்டும்.
விளையாட்டிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். உங்களை நீங்களே மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நேரந்தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெற்றி வந்தால் பணிவு அவசியம். தோல்வி ஏற்பட்டுவிட்டால் பொறுமை அவசியம். நம்பிக்கையோடு விளையாடுங்கள் என்றார்.
தொடர்ந்து, பள்ளியின் மருத்துவர் முருகேசன் விளையாட்டின்போது கவனத்தில் கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு வழிமுறைகளை விளக்கினார்.

