விரைவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு அறிமுகம்

டிஜிட்டலாகவும் அதே சமயம் நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு போலவும் இரண்டு வடிவங்களில் இந்த கார்டு கிடைக்கும்!

டெக் நிறுவனங்கள் நிதித்துறை பக்கம் கவனம் செலுத்தும் காலம் இது. ஃபேஸ்புக் டிஜிட்டல் கரன்சி பக்கம் ஒதுங்கியிருக்கிறது. இப்போது ஆப்பிள் கிரெடிட் கார்டு பக்கம் வந்திருக்கிறது. ஆப்பிள் ஊழியர்கள் மட்டும் பீட்டா டெஸ்டிங்கில் பயன்படுத்தும் இந்த கிரெடிட் கார்டு ஆகஸ்ட் மாதம் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள்.

டிஜிட்டலாகவும் அதே சமயம் நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு போலவும் இரண்டு வடிவங்களில் இந்த கார்டு கிடைக்கும். ஆனால், வழக்கமான கார்டுகளில் இருப்பதுபோல 16 டிஜிட் எண், 3 எண் கொண்ட CVV ஆகியவை இருக்காது.

ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதும் இவை புதிதாக உருவாக்கப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் கார்டுதான் என்றாலும் Goldman Sachs என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து இதைச் செய்யவிருக்கிறது ஆப்பிள். நாம் எப்போது, எங்கே, எவ்வளவு ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தோம் என்பதையெல்லாம் மூன்றாம் நிறுவனம் எதுவும் டிராக் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்கிறது ஆப்பிள்.

கிரெடிட் கார்டு என்றால் கேஷ்பேக் இல்லாமலா? ஆப்பிள் பே மூலம் செய்யும் பரிவர்த்தனைகளில் 2 சதவிகிதமும் ஆப்பிள் ஸ்டோரில் வாங்கும் பொருள்களுக்கு 3 சதவிகிதமும் கேஷ்பேக் கிடைக்கும். இந்த கார்டுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. மற்ற நாடுகளில் செய்யப்படும் பரிவர்த்தைனைகளுக்குக் கூடுதல் கட்டணம் கிடையாது. தாமதக் கட்டணம் உள்ளிட்ட எந்தப் பிற கட்டணங்களும் கிடையாது. வட்டியும் மற்ற கிரெடிட் கார்டுகளைவிடக் குறைவாக இருக்குமென மார்ச் மாதம் நடந்த நிகழ்வில் சொல்லியிருந்தது ஆப்பிள்.

மூன்று மாடல்கள்; 3 கேமரா; செல்ஃபியில் ஸ்லோ மோஷன்!’ ஆப்பிள் பிரியர்களே தயாராகுங்கள்…!

ஆப்பிள் வாலெட் பயன்படுத்துபவர்கள் இந்த கார்டு பெறலாம். எங்கெல்லாம் ஆப்பிள் பே ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த கார்டையும் பயன்படுத்தலாம். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனச் சொன்ன ஆப்பிள் தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் அவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.