மக்களை ஏமாற்ற முடியாது

இயக்குநர் கண்ணன் சிறப்புப் பேட்டி…

மக்களை சந்தோஷப்படுத்தும் திரைப்படங்கள் பல வந்தாலும், சில இயக்குநர்களின்  படம் பலரின்  கருத்தைக்  கவரும் அளவுக்கு இருக்கும். அதிகமாக சினிமா பார்க்கும் அனைவரும் இயக்குநர் கண்ணன் திரைப்படங்களைத் தவறாமல் பார்ப்பது உண்டு. அதற்கு காரணம், படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மக்களை தன் வசத்துக்குள் வைத்து இருக்கும் இயக்குநர்களில் இவரும் ஒருவர். ‘‘இவன் தந்திரன்’’ படத்திற்கு பிறகான சந்திப்பின்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை உங்களுக்காக…

‘வணக்கம். நான்தான் உங்கள் இயக்குநர் கண்ணன். என் சொந்த ஊர் காஞ்சிபுரம்.  சிறு வயதில் நான் சினிமாவில் இயக்குநர் ஆவேன்என்று சிந்தித்ததுகூட கிடையாது. என் பள்ளிக்காலத்தில்  இருந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் எழுதிய புத்தகங்களை ரசித்து படிப்பது உண்டு. தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள புத்தகங்கள்   எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று சொல்லலாம். மேலும் அவை வாழ்க்கையில் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்ல உதவியாக இருந்தது.

நான் இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலாவிடம் உதவி துணை இயக்குநராக பணியாற்றினேன். அப்பொழுதுதான் என் சினிமா பயணம் தொடங்கியது. மனோபாலா இயக்கிய நந்தினி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பிறகு மெட்ராஸ் டாக்கிஸ் தயாரிப்பில் மனோபாலா தொலைக்காட்சித் தொடர் இயக்கிக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது நான் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்துக்கு சென்று வரும் சூழல் ஏற்பட்டது. அப்பொழுது என்னிடம், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறீர்களா? என்று கேட்டார்கள். எனக்கு மிகப்பெரிய சந்தோசம். உடனே ஒப்புக்கொண்டேன்.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஆயுத எழுத்து’, ‘குரு’ போன்ற படங்களில் அவரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். சினிமாவின் பயணம் எப்போதும் பல கஷ்டங்களைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எனது சினிமா பயணம், மக்களைப்  பற்றியும் சமூகத்தைப் பற்றியும் மிக அழகாக சொல்லிக் கொடுத்தது.

என் முதல் படம் ‘ஜெயம் கொண்டான்’. அந்த படத்தை இயக்குவதற்கு முன்பு மக்கள் ரசிக்கும் அளவுக்கு நாம் படம் இயக்க வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. அதன்படியே ஒவ்வொரு படத்தையும் நான் இயக்கி வருகிறேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது ‘இவன் தந்திரன்’. இந்த படத்தின் கதை எழுதுவதற்கு முன்பு மக்கள் பிரச்னைகளை நாம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்று என் மனதில் ஆழமாகத் தோன்றியது.

பொறியியல் பட்டம் பெற்று பல மாணவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் சூழல் இப்பொழுதும் இருக்கின்றது. அதை கருவாக வைத்து படம் எடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து சுமார் இரண்டு வருடங்களாகத் திரைக்கதை எழுதத் தொடங்கினேன்.

பின்னர், இந்த கதையில் யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அப்பொழுது கௌதம் கார்த்திக், இந்த கதையின் கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பார் எனத் தோன்றியது. உடனே நானே தயாரித்து இயக்கி வெளியிட்டேன். தற்போது படமும் வெற்றிகரமாக நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. ‘இவன் தந்திரன்’ படம் வெளியானதும் பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் படத்தைப் பார்த்து பாராட்டினர். அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் திரையரங்கம் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

மக்களால் ஏற்றுக்கொண்ட படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும்போது இந்த சம்பவம் என் மனதை மிகவும் புண்ணாக்கியது. ஆனால்  ஒரு வாரம் கழித்து திரையரங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, மக்கள் திரும்பவும் என் படத்திற்கு  ஆதரவு கொடுக்கத் தொடங்கினர்.

அப்பொழுது ஒன்றைப் புரிந்து கொண்டேன். அது, ‘நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எப்பொழுதும் மக்கள் ஆதரிப்பார்கள்’ என்ற உண்மையை. மக்கள்  தெளிவாக உள்ளனர்.

அவர்களை நாம் ஏமாற்ற முடியாது. ஒரு திரைப்படத்துக்கு என்ன கதை வேண்டும், வேண்டாம் என்பதில் தெளிவாக உள்ளனர். இது நல்ல விஷயம். இவ்வாறான நிலையில்தான் இன்னும் பல நல்ல தரமான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும்.

சமீபத்தில் மக்களுடன் சேர்ந்து என் படத்தைப் பார்த்து பாராட்டினார் இயக்குநர் மணிரத்னம் அவர்கள். அவர் என்னை பாராட்டியது, எனக்கு இன்னமும் ஒரு பல நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்ற நேர்மையான ஆவலைக் கொடுத்தது.

என் வெற்றிக்கு எப்போதும் என் குடும்பம் எப்போதும் உறுதுணையாக இருக்கிறது. என் மனைவி, என் குழந்தைகள் என் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

நல்லதை நினைக்க வேண்டும். சந்தோசம் மட்டும் எப்போதும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. இது உங்களுக்கும் எப்போதும் இருக்கும் என்று சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். வாழ்க தமிழ்’.

-பாண்டியராஜ்