தமிழகத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறட்சியை எதிர் கொண்டுள்ள நிலையில் மழை நீர் சேகரிப்பின் முக்கியத் துவத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளனர். வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸிலிருந்து குறைந்தபட்சம் 26 டிகிரி வெப்பம் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, வேலூர் மாவட்ட பகுதிகளில் 6 செ.மீ. மழையும் செம்பரம்பாகம், மதுராந்தகம், தரமணி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேளம்பாக்கம், வந்தவாசி, காரைக்கால் 3 செ.மீ, மகாலிபுரம், தாமரைப்பாக்கம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ. மழையும், சோழவரம், விழுப்புரம், திருத்தணி, வேலூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.