‘‘கீதையே வாழ்க்கையின் பாதை’’

‘‘உங்களை அறிந்துக்கொள்ள இஸ்கான் வழிவகுக்கிறது’’

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும்  ஒரு லட்சியம் கண்டிப்பாக இருக்கும், இருக்க வேண்டும். இலட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க,  நமது நமது கல்வி மற்றும் சுற்றுச் சூழல் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் மனதில் ஆயிரம் குழப்பங்களை வைத்துக் கொண்டு வாழும் மனிதனால் எவ்வாறு இலட்சியத்தை நோக்கி நடைபோட முடியும்? குறிப்பாக, இந்த விஷயத்தில் இளம் சமுதாயத்தினர் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பதே உண்மை நிலை. அதேநேரம், அவர்கள் சரியான பாதையில் சென்றால் நாடு மிகச் சிறந்த முன்னேற்றம் காணும். இளைய சமுதாயம் சரியான பாதையில் போக என்ன வழி? இதற்கு கீதை என்ன சொல்கிறது என்ற கேள்விக்கு, பக்தி வினோத ஸ்வாமி  அவர்கள் ‘தி கோவை மெயில்’ பத்திரிக்கையிடம் பகிர்ந்து கொண்டவை.

பக்தி வினோத ஸ்வாமிக்கு இளம்பருவமானது, சாதாரண இளைஞர்களுக்கு உண்டான அத்தனை சிறப்புகளுடனும் இருந்தது.அப்போது,வெளிநாட்டைச் சேர்ந்த இந்து மதத் துறவி ஒருவரின் கேள்வியால் அவரது எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியென்னவோ மிகவும் சிறிது.அதற்கான பதில்தான் பெரிது, ஆனால் அதை அவரால் சொல்ல முடியவில்லை. அதற்கான விடைதேடும் முயற்சியின்போதுதான்,அவரின் வாழ்க்கையை மாற்றியது இஸ்கான் அமைப்பு.

முபை என்று சொன்னதும்,  24 மணி நேரமும் தொடர்ந்து ஓடும் மக்களின் வாழ்க்கைமுறை தான் நம் கண் முன்னால் நிழலாடும்.  ஆனால் வினோத ஸ்வாமி அவர்களுக்கு மாற்றம் என்ற விஷயம், மும்பையில் இஸ்கான் அமைப்பை பார்த்தபோது, தான் வாழ்ந்த வாழ்க்கைக்கும் மேலான பாசிடிவ் உணர்வுகளை அவருக்கு உணர்த்தியது.

1980 இல் திருச்சி என்ஐடி இல் பி.டெக்.கெமிக்கல் பட்டம் பெற்ற இன்ஜினியர் வினோத ஸ்வாமி அவர்கள். ஒரு இன்ஜினியராக தனது வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும்  வாழக்கூடிய தகுதிபெற்ற அவர், முழுநேர சன்னியாசியாக, துறவியாக இந்தியா மற்றும் உலக நாடுகளின் அமைதி மற்றும் சமுதாய மாற்றத்தைத் தேடி பயணித்தது புதுமையாக இருந்தது.

அவரிடம், மாற்றத்தை எப்படிக் கொண்டு வர முடியும் என்று கேட்டோம்.

1966 ஆம் ஆண்டு இஸ்கான் நிறுவனம் ஸ்வாமி பிரபு பதாவால் தொடங்கப்பட்டு பல நாடுகளில் பகவத் கீதையில் இருக்கும் நல்ல தகவல்களை பரப்பி வருகிறது. அந்த தகவல் என் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. நான் இஸ்கான் அமைப்பில் சேரும்பொழுது எனக்குள் பல ஆச்சர்யமான மாற்றங்கள் நடந்தன.

ஒரு வெளிநாட்டு இந்துத் துறவி என்னிடம் ‘நீங்கள் யார்?’ எனும் ஒரு சிறு கேள்வியைக் கேட்டார். பொதுவாக நாம் இக்கேள்விக்கு நமது பெயர், தந்தை பெயர், தொழில் தன்மை ஆகியவற்றை முன்னிறுத்தித்தான் பதில் கூறுவோம். ஆனால் அதுவா நாம்? இல்லையே! இக்கேள்வியைக் கேட்டுவிட்டு அந்தத் துறவி மேலும் என்னிடம், ‘நீங்கள் ஒரு இந்துவாக இருந்தும் இக்கேள்விக்கு விளக்கம் முடியவில்லையே?’ என்று கேட்டது எனக்கு பெரும் அவமானமாக இருந்தது.

அப்போது அவரின் வழிகாட்டுதலின்பேரில், நம் நாட்டின் கலாச்சாரமான பகவத் கீதையை முழுவதுமாக படிக்க ஆரம்பித்தேன். அதைப் படித்தபோதுதான், மனிதன் யார்? ஆத்மா என்பது என்ன? நான் யார்? நாம் சிறப்பாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான பதில்கள், நல்வாழ்க்கைக்கான வழிகள் என்னென்ன என்பதை என்னால்  உணர முடிந்தது. உடனே நானும் மாற்றத்தை தேடி பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்..

மும்பையில் நடைபெற்ற இஸ்கான் அமைப்பின் நிகழ்ச்சியில்தான் தர்க்கரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட ஆன்மிகத்தைக் கண்டுணர்ந்தேன்.வாழ்வின் உண்மையை உணர்ந்தபிறகு இன்ஜினியர் என்பதெல்லாம் எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.என் உடன்பிறந்தவர்களும் இன்ஜினியர்கள். அவர்கள் எனக்காக நல்ல வேலையைத் தொடங்க உதவினர். ஆனால் இன்ஜினியர் எனும் பதவியைத் துறந்து துறவியாக என் வாழ்க்கையை ஆரம்பித்து, கீதா உபதேசியாக இன்றும் தொடர்கிறேன். கேரளத்தில் இஸ்கான் அமைப்பின் கிளையைத் துவங்கி அங்கே கீதையை உபதேசித்து வருகிறேன்.அத்துடன் மலையாளத்தில் புத்தகங்களும் எழுதியுள்ளேன்.

கோவையில் பள்ளி, கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். மாணவர்களிடம், இளைஞர்களிடம் கீதையை உபதேசிக்கும்பொழுது அவர்களிடம் இருந்த ஆர்வத்தைக் கண்டேன். அத்துடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கீதா உபதேசம் செய்துவருகிறேன்.வெறும் உபதேசியாக, துறவியாக இல்லாமல், அறிவியல் ரீதியாக இந்து மத நம்பிக்கைகளை விளக்குகிறேன்.அத்துடன் சமூகப் பிரச்னைகளுக்கு கீதையின் மூலமாகத் தீர்வுகளும் சொல்லிவருகிறேன்.

மலைவாழ், பழங்குடியின மக்களுக்கு உணவுடன்கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.குறிப்பாக இளைஞர்களிடம் எங்களது விழிப்புணர்வை கொண்டுசெல்கிறோம்.தற்போது நாம் ஜிடிபி என்றுசொல்லிவருவதெல்லாம் அன்றைய இந்தியாவில் கிடையாது. நமது இந்தியா செல்வ செழிப்புடன்கூடிய நாடாக இருந்தது. அதுவே நமது செழிப்பான கலாச்சாரம்.ஆனால் தற்போது ‘செல்வம்’ என்பது பணத்தைக் கொண்டும் நாம் வைத்திருக்கும் பொருளைக் கொண்டும் மதிப்பிடப்படுகிறது.இது மிகவும் வருந்தத்தக்கது.உண்மையில் பொருளாதாரம் என்பது பணத்தைக் கொண்டு அளவிடுவதல்ல. நமது உண்மையான கலாச்சாரமும் அல்ல. ஒரு மனிதர்மீது மற்றொருவர் கொண்டிருந்த உண்மையான நட்பு, மதிப்பு, மரியாதை எல்லாம் இப்போது போய்விட்டது. பணமே பெரிதாக இருக்கிறது.

இந்தியாவில் டெக்ஸ்டைல் நம் முன்னோர்களின் வலிமையான தோள்களில் இருந்தது.நம்மை ஆண்ட பிரிட்டிஷார் அவர்களின் கைகளை வெட்டி, நமது பொருளாதாரக் கொள்கையை, கலாச்சாரத்தை மாற்றிவிட்டனர். ஒருதருணத்தில் நமது இஸ்கான் அமைப்பு குரு, இங்கிலாந்து சென்றபோது பத்திரிகையாளர்கள் அவரிடம் ‘எதற்காக இங்கே வந்தீர்கள்?’ என்று கேட்டபோது, ‘நீங்கள் இந்தியாவில் இருந்து எடுக்க வேண்டியதை எடுக்கவில்லை. அதைக்கொடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன்’ என்றார். அவர் கூறியதன் பொருள், செழிப்பு என்பது புறம் சார்ந்தது அல்ல, அகம் சார்ந்தது. எவ்வளவோ பணம், நகை என்று இந்தியாவில் இருந்து எடுத்துச்சென்றாலும், அவர்கள் நமது ஆன்மிகத்தை எடுத்துச் செல்லவில்லை. ஆன்மாவிற்கான அமைதியைத் தரும் வழியைப் பரப்பவே அவர் அங்கு சென்றார். அவர் வழியில் இரதயாத்திரை தொடர்ந்து செல்கிறது.

உண்மையில் கோயில்களுக்குச் செல்வதன் நோக்கமே வேறு. வெறும் பூஜை, காணிக்கைகள் என்பதெல்லாம் கோயில்களின் நோக்கம் அல்ல. இஸ்கான் கோயில்களில் ஆன்மிகக் கல்வி போதிக்கப்படுகிறது.ஸ்ரீவிக்கிரகம் என்றால் என்ன? கடவுள் யார்?உலகம் என்பது என்ன? உண்மை என்ன? கோயில் என்பது என்ன? என்ற கேள்விக்கெல்லாம் தற்போது விஞ்ஞான பதில்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதற்கெல்லாம் நமது சாஸ்திரத்தில் ஆன்மிக ரீதியில் அறிவியல்பூர்வமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கென புத்தகங்களும் உள்ளன. கடவுளுடன் நாம் எவ்வாறு நம்மை தொடர்புபடுத்திக்கொள்வது? என்றெல்லாம் யாரும் யாரும், ஏன், நமது வீடுகளில், பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் தங்களுக்கான பாதையில் செல்கிறார்கள். இந்துக்களுக்கென தனியாக ஒரு பாதை இல்லை. ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லுகின்றனர்.

இந்நிலையில் இருந்து விலகி, கடவுள் யார்?இந்து யார்?இந்த உலகில் நாம் யார்?என்ன செய்துகொண்டு இருக்கிறோம்? நமது நோக்கம் என்ன?என்பது குறித்தும் அறிவியல்ரீதியான ஆன்மிகப் பாதையை இஸ்கான் அமைப்புவழங்கி வருகிறது.

இப்போது இந்த விஷயம் சிறிது சுலபமாக இருக்கிறது.ஆனால் நமது மிகப்பெரும் இந்து நாடான இந்தியாவில் அவ்வளவு எளிதாக இல்லை. அவ்வேளையில் நமது குரு 40 ஆண்டுகள் இந்துப் பிரச்சாரம் செய்தார்.ஆனால் எந்தப் பலனும் இல்லை. பின்னர் அவர் அமெரிக்கா சென்றார்.அங்கே அவரின் உபதேசங்களைக் கேட்டு அமெரிக்கர்கள் வியப்படைந்தனர்.அங்கு அவர் மிகப்பிரபலமானார்.பின்னர் அங்கிருந்துதிரும்பிய அவர் தனது ‘டான்சிங் வெயிட் எலிபண்ட்’ எனும் வெளிநாட்டு இந்துத் துறவிகளைக் கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் அவரது பேச்சைக் கேட்டனர்.அத்தருணத்தில் அவர் கூறியது, ‘உலகிலேயே உண்மையான கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் நீங்கள், உறங்குவதுபோல் கண்மூடிக் கொண்டு நடிக்கிறீர்கள்.நீங்கள் உங்கள் அறிவுக்கண்ணைத் திறந்துகொண்டு உங்கள் உண்மையான கலாச்சாரத்தை உணருங்கள்’ என்று பிரச்சாரம் செய்தார்.வெளிநாட்டினர் எல்லாம் நம்மைப்பற்றி பேசுசிறார்களே?இத்தனைநாள் இதைப்பற்றி தெரியாமல் இருந்துவிட்டோமே?இது நன்றாக இருக்கிறதே என்று உணர்ந்துபிறகுதான் இந்தியாவில் இந்துக் கலாச்சாரம் மிகவும் பிரபலமானது.

அவர்வழியில்தான் நாங்களும் பிரச்சாரம் செய்துவருகிறோம். கோயில்கள் கல்விக்கூடமாக இருக்க வேண்டும். இஸ்கான் கோயில்கள் அவ்வாறே செயல்படுகின்றன.இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் கருத்துப் பரிமாற்றங்களும் எங்களது கோயில்களில் நடைபெறுகின்றன.இங்கே ஆன்மிகம் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளது.

அதுவே ‘கோவை சந்திரா’வில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மக்கள் தங்களை ஆத்மா என்று உணரும் வகையில் கலைக்கூடமாக இது உள்ளது. சந்திரன் என்பது குளுகுளுவென்ற நிலவு. கோவையின் நிலவு என்பதே ‘கோவை சந்திரா’. கிருஷ்ணர் பகவத் கீதையில் நிலவு என்பது அமைதி, மனம் எனக் குறிப்பிடுகிறார். இங்கே வரும் மக்கள் தங்களது கவலை, துயரத்தில், துன்பமெனும் சூட்டில் இருந்து குளுமையடைய வேண்டும் என்பதே இக்கோயிலின் தாரக மந்திரம். அதுவே கோவை சந்திராவின் நோக்கமும்.

பகவத் கீதை என்பது இயற்பியல், உயிரியல், பொறியியல் என எல்லாம் கலந்தது. கீதையின் 13 ஆவது அத்தியாயத்தில் தியானம், அறிவு என்பதற்கு விளக்கம் அளிக்கிறார்.சரீரம் என்பது நிலம். ஆத்மாவின் இருப்பிடம்.அனைவரும் அறிந்தது உடல்.யாரொருவர்,‘‘இந்த உடல் என்பது நான் இல்லை. இந்த உடலை இயக்கும் நபரே நான் என்று உணர்கிறாரே அவரே ஞானம்பெற்றவர்’’ என்கிறார் கிருஷ்ணர். பொருளுக்கும், ஆத்மாவுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவேண்டும்.உடல் என்பது பொருள். ஆத்மா இருப்பதனால்தான் இந்த உடல் இயங்குகிறது.பொருளாகிய உடலும், ஆத்மாவாகிய நீங்களும் ஒன்று என்பதை உணர்ந்துகொண்டு வாழ்ந்தால் உயர்வடையலாம்.

தற்போதைய நவீன அறிவியல்,பொருளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. உணர்வுகளைக் குறித்து அது பேசுவதில்லை. உணர்வை அறிவியல் நிரூபிக்க முடிவதில்லை.நமது அறிவியல் கலந்த ஆன்மிகம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. இதுவே உயர்ந்த அறிவியல். இதுவே நமது கலாச்சாரம். இதையே நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆன்மிகமும் சமூக உணர்வும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக நாடு வளம்பெறும்  என்பது இஸ்கான் அமைப்பின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு கடவுள் இருக்கின்றார். அதை நாம் முதலில் உணர வேண்டும். சமுதாயத்தில்  இருக்கும் பிரச்சனைதான் மனிதனின் மனதையும் அவன் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன், உலகம் முழுக்க எவ்வளவு வகையான பிரச்சனை இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டின் ஆன்மிகத்தையும், கலாச்சாரத்தையும்  உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் கொண்டு போய் சேர்த்தாலே போதும். மற்ற பல நல்ல நிகழ்வுகளை, மாற்றங்களை நம்மால் பார்க்க முடியும்.

இஸ்கான் அமைப்பைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அமைப்பு, கடந்த 50 ஆண்டுகளாக பல மொழிகள் தாண்டி மக்களின் மனதில்  ஒரு தனி இடம் பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.  650 இஸ்கான் கோவில் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உலகம் முழுக்க அமைக்கப்பட்டு இருக்கிறது. 110 ஹரே கிருஷ்ணா சைவ உணவகங்கள்  உலகம் முழுக்க அமைக்கப்பட்டு உள்ளன. 1966 முதல் உலகம் முழுக்க 516 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் கணக்கில் அடங்காத பல ஆன்மிக சாதனைகளை இஸ்கான்   ஆன்மிக நிறுவனம் செய்து வருகின்றது.

– கா.அருள்.