விகடன் நம்பிக்கை விருது பெற்ற பிஎஸ்ஜி முன்னாள் மாணவி

‘ரேடியோ மிர்ச்சி’ ஆர்.ஜே.சாரு நேர்காணல்

‘வானொலி  தொகுப்பாளின் (Radio Jockey) பணி  நான்  இரசித்து செய்யும் தொழில். நாம்  கஷ்டப்பட்டு உழைக்கும் போது நம்மை ஊக்கப்படுத்தும் சில விஷயங்கள் தானாக நடக்கும். அப்படி என்னைத்  தேடி வந்த விஷயம்தான், ‘விகடன் நம்பிக்கை விருது’. ஒரு நாள் விகடன் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது, அதில், உங்களுக்கு விகடன் நம்பிக்கை விருது கொடுக்கப் போறோம் என்று சொன்னார்கள். எதிர்பார்க்காமல் ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியால் என் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.

இது, நான் வாங்கிய முதல் விருது. அதுவும் பெருமைக்குரிய விருது. ‘கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே’ என்பார்கள். அதை மிகச் சரியாக செய்பவள் நான். எப்போதுமே நாம் நம் வேலையை இரசித்து மனதிர்ற்குப்  பிடித்து செய்யும்பொழுது, நம் கடின உழைப்பு கண்டிப்பாக மற்றவர்களுக்குத்  தெரிய வரும். மேலும்  அதற்கு சரியான நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கும். அப்போது நமக்கு இன்னும் வேகமாக ஓடி உழைக்க வேண்டும் என்று தோன்றும். என் சிறு வயதில் பள்ளிக் காலங்களில் எனக்கு விருது கிடைத்தது. அதை வாங்கும்போது என் பெற்றோர் விழாவுக்கு வர முடியவில்லை.

ஆனால் விகடன் விருது வாங்குவதைக் காண அப்பா, அம்மா என்னுடன் வந்தது மகிழ்ச்சி. தற்போது ‘ரேடியோ மிர்ச்சியில் 11 முதல் 2 மணி  வரை ‘கோலி சோடா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். நிகழ்ச்சி முழுக்க சினிமா உலகில் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியதாக இருக்கும். சினிமாவைப் பற்றி சொல்லப் போகிறோம் என்றால் நம் மக்கள் அனைவரும் கிசுகிசு நிறைய எதிர்பார்க்கலாம் என்று நினைப்பார்க்கள். ஆனால் நான் அதைக் கொஞ்சம் மாற்றி அமைத்து சினிமாவுக்கு பின்னால் இருக்கும் விஷயங்களை வைத்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அது எப்படியிருக்கும் என்று வரும் காலங்களில் நீங்கள் நிகழ்ச்சியைக் கேட்கும்போது புரியும்.

விகடன் விருதுக்கு பிறகு வீடு மற்றும் அலுவலகத்தில் பாராட்டு கிடைத்தாலும் அனுதினமும் புதுமைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. என் கல்லூரி நண்பர்கள், ஆசிரியர்கள் நான் விருது பெற்றதற்கு மகிழ்சசி  தெரிவித்ததுடன், ஊக்கமும் கொடுத்தனர். அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். பெண்களுக்கு பெண்களே வாய்ப்பு கொடுக்கும் சூழல் ஏற்பட வேண்டும். எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தாலும் பெண்களுக்கான இந்த ஒரு உரிமை கிடைத்தால் நம் நாடு வளம் பெறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தோழிகளே நீங்களும் சாதனைகள்  பல படைக்க உங்கள்  திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

பாண்டிய ராஜ்