‘‘ஒட்டுமொத்தத் திறமையும் பெற்ற ஒரே நபர் சிம்பு’’

சினிமாவில் பல விஷயங்களை நாம் பார்த்திருப்போம் ரசித்திருப்போம். ஆனால் ஒவ்வொரு தொழில்நுட்பக்கலைஞர்களான பின்னாலும் நாம் பார்க்காத சில அழகான கதைகள் இருக்கும். அது, அவர்களைச் சந்தித்து உரையாடும் பொழுதுதான் நமக்குத் தெரியவரும். அப்படிப்பட்ட ஒரு அழகான கதையைத் தெரிந்துகொள்ள, ‘‘கல்யாண சமையல் சாதம், சரபம், டார்லிங், அன்பானவன் அசராதவன் அடங்காவதான்’’ ஆகியபடங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள திரைப்பட ஒளிப்பதிவாளர்  கிருஷ்ணன் வசந்த் ‘தி கோவை மெயில்’ சிறப்பு பேட்டிக்காக அணுகினோம்.

உங்களின் பெயருக்குள் இருக்கும் ரகசியம் என்ன?

(சிரித்துக் கொண்டே) என் பெயர் கிருஷ்ணன், எங்கஅப்பா பெயர் வசந்த் இதைஇரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டேன். நான் ஒளிப்பதிவுத் துறையில் வருவதற்கு எங்க அப்பா முக்கியகாரணம். என் சிறு வயதில் எனக்கு ஒரு அழகான கேமரா வாங்கிக் கொடுத்து எனக்குன்னு ஒரு பாதையைஅமைத்துக் கொடுத்தவர் எங்க அப்பா தான்.

மறக்க முடியாத தருணம்?

நான் சிறு வயதில் இருந்தே நன்றாக ஓவியங்கள் வரைவேன். பல புகைப்படங்களை எடுத்து அதில் இருக்கும் நிறை குறைகளை பார்ப்பதுண்டு. என் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நான் இயக்குநர் பாலுமகேந்திராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தநாள் எனக்கு எப்போதும் மறக்க முடியாதநாள். நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து விட்டு, எனக்குள் இருக்கும் திறமையை புரிய வைத்து, அவர் ஒய்வு எடுக்கும் தருணத்தில் எனக்கு பல ஒளிப்பதிவு விஷயங்களை கற்றுக்கொடுத்தார். அந்தநாள் இன்னும் என் மனதில் நீங்காமல் இருக்கின்றது.

இயக்குநர் பாலுமகேந்திரா?

என் வாழ்வில் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம் என்று தான் சொல்லுவேன். அவரை சந்தித்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஒருநாள் என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் இப்போதும் என் நெஞ்சில்  நிற்கிறது. ‘வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள். பிறகு, அதுவே உன் சினிமா வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்’என்றார்.

மற்ற மொழிகளில் பணியாற்றும் பொழுது கிடைத்த அனுபவங்கள் ?

ஹிந்தியில் பலபடங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளேன். அங்கு கிடைத்த அனுபவங்கள் எப்போதும் ஒரு புதுமையான விஷயம்தான். காரணம், ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு தனித்துவமான களத்தை உருவாக்கக் கூடியவை.

உங்கள் இயக்குநர் ஆதிக் பற்றி?

எனக்குக் கிடைத்த நல்ல நண்பர். கமர்சியல் சினிமாவுக்கு உண்டான அத்தனை விஷயங்களையும் புரிந்து கொண்டு படம் எடுக்கக்கூடியவர்.

STR?

ஒட்டுமொத்தத் திறமையும் ஒரே ஒரு மனிதருக்குள் இருப்பதை சிம்புவிடம் பார்க்கலாம். பார்த்த உடன் நண்பனாக்கிக் கொள்ளும் எண்ணம் உடையவர்.

அன்பானவன் அசாரதவன் அடங்காதவன்?

எனக்கு சவாலாக அமைந்த திரைப்படம். சிம்புவின் கதாபாத்திரம் மதுரை மைக்கேல், அஷ்வின், தாத்தா என இக்கதாபாத்திரங்களை படத்தில் பார்க்கும்பொழுது ஒரு புதுமையான கலர் ஃபுல் ட்ரீட்டை நீங்கள் இரசிக்க முடியும்.

உங்களின் அடுத்தகட்ட பயணம் ?

மக்களைக் கவரும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்குண்டான பயணத்தில்தான் இப்பொழுது இருக்கிறேன். ‘‘வெற்றியைத் தேடி செல்வதைவிட, உங்கள் தனித்துவத்தை உணர்ந்து செயல்படுங்கள்’’என்றுகூறிக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

– பாண்டியராஜ்.