சச்சிதானந்த பள்ளியில் ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிப்பு

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்,  ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிக்கப்பட்டது. மாணவ சமுதாயத்தினரிடம் சுற்றுச்சூழல் மாசுபாடு, மரம் வளர்ப்பு ஆகியனவற்றைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் ‘ஏப்ரல் கூல் டே’ நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய, பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர்  கவிதாசன், “இயற்கையைப் பாதுகாப்பது பள்ளி மாணவ மாணவியரின் கடமைகளுள் ஒன்று ஆகும். எனவே, ஏப்ரல் மாத முதல் நாள் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகின்ற வழக்கத்திற்குப் பதிலாக, அந்த நாளில் மரங்களை நட்டு வைத்து, நாம் வாழும் சுற்றுப்புறத்தைப் பசுமையாகவும், குளிர்ச்சி நிறைந்ததாகவும் மாற்றுகின்ற நோக்கில், நம் பள்ளியில் ஏப்ரல் 1 ஆம் நாளினை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடி வருகிறோம். நம் பள்ளி வளாகத்தில் மட்டுமே 1800க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அவற்றில் மருத்துவ குணம் மிக்க மரங்கள் மற்றும் தாவரங்கள் பல உள்ளன. நம் பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவியர் தங்களின் பிறந்த நாளன்று மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். நாம் ஒவ்வொருவரும் மரங்களை நட்டு வளர்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். ஏப்ரல் 1 ஆம் தேதியை மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கும் நாளாகக் கொண்டாடுவோம். நமது பூமியைக் குளிர்ச்சி மிக்கதாக மாற்றுவோம்” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக, மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அத்துடன் மரம் வளர்ப்பு பற்றிய பதாகைகளைக் கைகளில் ஏந்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். பள்ளியின் கல்வி ஆலோசகர் . கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் சுற்றுச்சுழல் மன்ற ஆசிரியர்கள், முருகேசன், ஜெயலட்சுமி மற்றும் பராமரிப்புத்துறையைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.