எனக்காகவும் வருவார்…

இராணுவத்தில் எதிரிகளை வீழ்த்த ஒரு பலம் வேண்டுமெனில், கணவன் இல்லாத நாட்களை சமாளிக்க ஒரு மனைவிக்கு தனி பலம் வேண்டும். நாட்டுக்காக போராடும் ஒவ்வொரு இராணுவ வீரரும் கண்டிப்பாக தன் உயிரைப் பற்றி எப்போதும் கவலைப்படமாட்டார். ஆனால், ஒரு விஷயத்திற்கு வருத்தப்படுவார். அது, தன் காதல் மனைவியை விட்டு பிரிந்து வேலை செய்வதுதான்..! கணவனின் ஓய்வில்லாத வேலையை நினைத்தும், ஒவ்வொரு நாளும் அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்றும், 30 வருடங்களாக தன் அன்பு கணவனுக்காகக் காத்திருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஞானலட்சுமி தன் கடந்த கால நினைவுகளைப் பகிர்கிறார்.
அவர் பேசுகையில், ‘கணவர் ஒரு ராணுவ வீரர் என்பது சந்தோசமாகவும், பெருமையாகவும் இருந்தது. 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவீட்டார் எதிர்ப்புகளை மீறி, சாதி மாறி திருமணம் செய்தோம். காதலிக்கும்பொழுது அவரின் பணியை நினைத்து பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கல்யாணத்திற்கு பிறகு தனிமையில் வாடினேன். ஆறுதலுக்கு சொந்தபந்தங்கள் பலர் இருந்தாலும் கணவர் இல்லாத நாட்களை தனிமையில் கடப்பது கடினமாகத்தான் இருந்தது. அவருக்கு வேலைதான் முதல் காதலி. பிறகுதான் நான்! அந்த அளவிற்கு தன் வேலையில் நேர்மையாக பணியாற்றினார்.
கார்கில் போரின்போது பல இராணுவ வீரர்கள் இறந்தனர். அதைக் கேள்விப்பட்டு என்னுடைய பயம் உச்சத்திற்கே சென்றது. தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல் நான் தவித்த அந்த நாட்களை விவரிக்க முடியாது. பிரார்த்தனை மட்டுமே எனக்கு இருந்த ஒரே ஆறுதல்.
இப்படி ஒருவருக் கொருவர் மாறிமாறி நினைத்து கொண்டிருந்தோம். தொலைபேசி இல்லாத அந்த நாட்களில், கடிதங்களின் மூலம் எங்கள் காதலைப் பரிமாறிக் கொண்டோம். ஒருமுறை எனது மகனிற்கு கடும் காய்ச்சல். அந்தவேளையில், பள்ளியில் நானும் எனது கணவரும் மனஸ்தாபத்தில் உள்ளோம் என்று தவறாக நினைத்து என்னிடம் கோபமாக பேசிவிட்டார்கள்.
அதைக்கேட்டு அவருக்கு நானும் கோத்தில் அவருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டேன். எப்பொழுதும் விடுப்பு எடுக்காத எனது கணவர் அந்த கடிதத்தைப் பார்த்த உடனே கிளம்பி வந்துவிட்டார்.
எப்பொழுதும் கணவர் வேலை மட்டுமே பார்க்கிறார். எனக்காக நேரம் ஒதுக்குவதில்லை. இப்படித்தான் பல பெண்கள் புலம்புகிறார்கள். ஏன் பெரும்பாலும் குடும்பத்தில் அதிக பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணம். இதைப் பற்றி உங்களின் கருத்து?
ஒருமுறை நானும் எனது கணவரும் சினிமாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். கிளம்பும்பொழுது அவருக்கு உயர் அதிகாரியிடம் போன் வந்தது. உடனே என்னைத் திருப்பி வீட்டிற்கு அனுப்பி விட்டார். அப்பொழுது நான் கோவப்பட்டு பேசியிருந்தால் இன்று அவர் கேப்டன் ஆகியிருக்க மாட்டார். பெண்களுக்கு பொறுமை என்ற குணம் எப்பொழுதும் இருக்க வேண்டும். அவர் எனக்காக நேரம் ஒதுக்காததை நினைத்து சண்டையிட்டால் அதற்கு தீர்வு என்றும் இருக்காது. உங்களின் பொறுமை அவரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்றார்.

– பிரியங்கா கனகராஜ்