‘வா தோழி  சாதிக்கலாம்’

 

மெட்ராஸ் சென்ட்ரல் சேனல், ஹலோ எஃப்.எம். ஆர்.ஜே. மஹாலக்ஷ்மியிடம் நேர்காணல்…

(பி.எஸ்.ஜி. கல்லூரி முன்னாள் மாணவி)

 

தினமும் காலையில் இருந்து மாலை வரை ஒரே இடத்தில் இருந்து வேலை பார்க்க முடியாது. எனக்குள் தனித்திறமை இருக்கின்றது. அதற்குத் தகுந்தாற் போல் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நமக்குப்  பிடித்தவற்றை நாம் செய்ய வேண்டும். சினிமா, மீடியாத் துறையில் சாதிப்பதே என் இலட்சியம்  என்று கூறும் ஹலோ எஃப்.எம். ஆர்.ஜே. மஹாலக்ஷ்மி நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களைக்  காண்போம்.

‘பல காலமாக நமது சமூகத்தில்  அனைத்துப்  பெண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. ஆனால் அவர்களின்  கனவு உலகம் எப்படி இருக்கின்றது என்பதைக்  குறித்து யாரும் கேட்பது இல்லை. எத்தனையோ பெண்கள் தன் கனவை சொல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இது ஒவ்வொரு பெண்களின் வெற்றியைக்  குழி தோண்டி புதைப்பதற்கு சமம். நமது வாழ்க்கைமிது நமக்கு ஒரு ரசனை இருக்க வேண்டும். அந்த ரசனை மிகுந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று அதை அனுபவிக்கும்போதுதான்  உணர முடியும்.

பள்ளிக்  காலங்களில் என் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தது உண்டு. அப்போது என்னுள் இருக்கும் திறமையை உணர முடிந்தது. உடனே எங்கள் வீட்டில் சொல்லி நான் நிச்சயமாக காட்சித் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேசன்) படிக்க வேண்டும் என்றேன். அதற்கு என் அப்பாவோ வேண்டாம் நீ பி.காம். படி என்றார். பிறகு பெற்றோருக்கு என் திறமையை சொல்லிப் புரிய வைத்தேன். அவர்களும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து என்னை வழிநடத்தினர்.

பின் கோவை பி,எஸ்,ஜி. கல்லூரியில் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி. விஸ்காம். படித்தேன். படிக்கும்போதே என் திறமையை பட்டை தீட்டிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பெண்ணாக என்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிஎஸ்.ஜி. கல்லூரி கற்றுக் கொடுத்தது.

நம் மக்களுக்கு சில விஷயங்களை  சொல்லிப்  புரிய வைத்தால் கேட்டுக் கொள்வார்கள். அந்த விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் ஏன் ரேடியோ ஜாக்கியாகக்  (ஆர்.ஜே) கூடாது என்ற எண்ணம் எனக்குள் உதித்தது. பலதரப்பட்ட மக்களிடம் பேசுவதற்கு அது எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணி ஹலோ எஃப்.எம். இல் மாலை 4 மணிக்கு வாலு என்ற ஷோ செய்யத் தொடங்கினேன். அதிகாலையில் இருந்து வேலை பார்த்தவர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் நேரம் அது. அவர்களை எப்படி உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களின் வாழ்க்கை மிது எந்த அளவுக்கு ஈர்ப்பு வரச் செய்ய வேண்டும் என்பதைப்  புரிய வைக்கும் விதமாக என் 4 மணி ஷோ இருந்தது.

மூன்று வருடங்களாக ஹலோ பண்பலையில் பணியாற்றிக்  கொண்டு இருந்தேன். என் ஷோவைக்  கேட்டு  பலர் ரசிகர்கள் ஆகிவிட்டனர். இன்னும்  ஒருபடி மேலேபோய், ஒரு பையன், என்னைக்  காதலிக்கக்கூட ஆரம்பித்து விட்டான். அவன் காதலை என்னிடம் சொல்லும்போது, என் மனதில் இருந்தது ஒரே விஷயம்தான், நான்  ஜெயிக்க வேண்டும். அதுவரை எதைப்பத்தியும் சிந்திக்க நேரம் இல்லை. இதனை அவனுக்குப்  புரிய வைத்தேன். அவனும் ஏற்றுக்கொண்டான்.

என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்  செல்லும் படியாக, ‘கலாட்டா இதழ்’ நடத்தும் ‘சிறந்த ஆர்.ஜே.’ விருதுப்  போட்டியில் எனது பெயரும்  தேர்வாகி  இருந்தது. பல ஆர்.ஜே.க்களின் பெயர்கள் அதில் இருந்தன. அந்த விருதைத்  தட்டி செல்வோமா, இல்லையா என்று மனதில் குழப்பம். கடைசியில் அந்த விருது எனக்குக் கிடைத்தது. விருது வழங்கும் விழாவுக்குச் சென்றிருந்தேன். என்னால் நம்ப முடியாத விஷயங்கள் அங்கு நடந்தன.

கமல், விஷால், லதா ரஜினிகாந்த் போன்ற சினிமாத்  துறை ஜாம்பவான்கள் தோன்றிய மேடையில் நானும் விருது வாங்கப்  போகிறேன்  என்ற எண்ணம்  மிகவும் சந்தோஷமாக இருந்தது. விருதை வாங்கியதும் என் மனது இந்த உலகத்தில் இல்லை. விருது வழங்கும் மேடையில், ஆர்.ஜே.வைப்  போல் பேசிக் காட்ட வேண்டும் என்றார்கள். ஆண்கள் மீசை வைத்தால் அழகா இருப்பார்களா? மீசை இல்லாமல் இருந்தால் அழகாக இருப்பார்களா? என்ற கேள்வியை அளித்தார்கள். அதற்கு என் ஸ்டைலில் பேசுவதைப் போல் பேசினேன். ஆண்கள் மீசை இருந்தால்தான் அழகு என்று நாம் சொல்லக்  கூடாது. ஆண்கள் எப்போதும் அழகு என்று சொன்னவுடன், அங்கிருந்த நடிகர் ஆர்யா பயங்கரமாக சிரிக்கத்  தொடங்கி விட்டார். அந்த வீடியோ யூ-டியூப் வலைத்தளத்தில் தனி சாதனை படைத்து வருகிறது.

மூன்று வருடம்  ஆர்.ஜே.வாகப்  பணியாற்றினேன். அதனிடையே சிறந்த ஆர்.ஜே விருதையும் வாங்கினேன். அடுத்து நாம் என்ன செய்யலாம் என்று எண்ணியபோது, மக்கள்  பலரையும்  ஈர்த்துக்  கொண்டிருக்கும் ‘மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப்’ சேனலில் பணியாற்ற வாய்ப்புக்  கிடைத்தது. ஒரு பெண் சுதந்திரமாகப் பணியாற்ற, இந்த மெட்ராஸ் சென்ட்ரல் மிகவும் பக்கபலமாக இருக்கின்றது. எனக்குள் இருக்கும் தனித் திறமையைப்  புரிந்து கொண்டு இங்கு வழி நடத்திச்  செல்கிறார்கள். வரும் காலங்களில் பெண்மையை மையப்படுத்தி பல நிகழ்ச்சிகள் செய்ய இருக்கிறேன். அதேபோல் சிறந்த பெண் இயக்குநர் ஆக வேண்டும் என்பது எனது பலநாள் கனவு. அதற்குண்டான கதையை எழுதி வருகிறேன். எப்போதும் புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். புத்தகம் நாம் வாழ்க்கைத்  தரத்தை உயர்த்தும்.

பெண் தன்னை உணர்ந்து கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும்  புத்தகங்கள்  ஒரு வழிகாட்டியாக இருக்கும். நம் சமூகம் எப்படி செயல்பட்டு வருகிறது, அதை எதிர்நோக்க எந்த மாதிரியான மனநிலை இருக்க வேண்டும் என்பதை புத்தகங்கள்  கூறுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. பாலியல் வன்முறை சம்பவங்கள் பெண்களின்  வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது. மிடூ போன்ற விஷயம் பல பெண்களுக்குச் சென்றடையும்போது தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்குள் இருக்கும் பயம் விலகி, தவறுகளை எதிர்த்து போராடுவோம் என்ற மனப்பாங்கு வர வேண்டும்.

பெண் சமுதாயம் வெற்றிபெற வேண்டும். அழகான வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் அமைய வேண்டும். அதுதான் நம் நாட்டுக்குக்  கிடைக்கும்  முதல் வெற்றி. இந்த உலகத்தில் அன்பைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அன்பே சிவம் என்று வாழ்பவள் நான். ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒரே விஷயம்தான். வா தோழி, சாதிப்பதற்கு உலகில் இடம் இருக்கிறது. உன்னை உயர்த்திக்கொள்ள இதுதான் சரியான சந்தர்ப்பம்.

 

—- பாண்டிய ராஜ்