அக்னிபத் திட்டத்தில் சேர குவியும் விண்ணப்பங்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளப்பி வரும் நிலையில், இதற்கு விண்ணப்பிப்பதற்கும் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரும் போதிலும், அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர்வதற்கு 4 நாட்களில் சுமார் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்னிபத் திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதனைத் தொடர்ந்து ராணுவம், விமானப்படை, கப்பற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள் தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி விமானப்படைக்கு ஆள் தேர்வு பணி கடந்த 24 ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், திங்கட்கிழமை காலை 10.30 மணி நிலவரப்படி 94,281 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பிக்க ஜூலை 5 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஜூலை 24ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்றும் அதன்பிறகு நான்கு ஆண்டு இராணுவ தேவைக்காக அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.