மாணவிகளுக்கு ரூ. 1000 கல்வி உதவித்தொகை – எப்படி விண்ணப்பிப்பது?

அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கான தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார்? எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவலை இங்கு காண்போம்.

பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து, படிப்பு முடியும் வரை மாதம் ரூ. 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.

யார் தகுதியானவர்கள்:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்.

பள்ளி முடித்த பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

சான்றிதழ், பட்டயம், இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவைகளில் சேருபவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இது பொருந்தாது.

2021-2022ம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

எப்படி விண்ணப்பிப்பது:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு புதிய இணைய முகவரியை தொடங்கியுள்ளது. அதன்படி, பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை, penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகலை வழங்கி மாணவர்கள் தங்களது கல்லூரிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே கைப்பேசி அல்லது கணினி வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.