இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் ஜூலை 16 ‘உழவே தலை’ 4.0 நிகழ்ச்சி

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் ‘உழவே தலை’ என்ற தலைப்பில் விவசாயம் சார்ந்த ஒரு நாள் கருத்தரங்கம் வரும் ஜூலை 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் நான்காவது பதிப்பு ஜூலை 16 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.

தற்போது நடைபெற இருக்கும் இந்த வேளாண் கருத்தரங்கு பற்றிய தகவலை இந்திய தொழில் வர்த்தக சபை கோவை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி வேளாண் கருத்தரங்கை துவக்கி வைக்க உள்ளார். மரம் வளர்ப்பை மையமாக வைத்து இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சமூக காடு வளர்ப்பு, பழ மரங்கள், நீண்ட கால மர பயிர் வளர்ப்பு என்ற மூன்று தலைப்புகளில் நிகழ்வு நடைபெறுகிறது. மரம் வளர்ப்பது தொடர்பான யோசனைகளும், விவசாயிகளின் அனுபவங்களும், கேள்வி, பதில் பகுதியும் அமைய உள்ளது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கருத்தரங்கிற்கான முதல் டிக்கெட் வெளியீடு கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பேர்ஸ் டவ்ர்சில் நடைபெற்றது.

சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் முதல் டிக்கெட்டை வெளியிட வனம் இந்தியா அமைப்பின் நிறுவனர் மற்றும் செயலாளர் சுந்தரராஜ் பெற்றுக் கொண்டு பேசுகையில், உலகின் முதன்மையான தொழிலே விவசாயம் தான். ஆனால் கோவை போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில் உள்ள இளம் தலைமுறையிடம் விவசாயம் குறித்த விழிப்புணர்வு குறைந்து கொண்டே போகிறது.

அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. ஆனால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களது நலனில் அக்கறை செலுத்தும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவைக்கு தனது நன்றியினை தெரிவிப்பதாக கூறினார்.

இதில், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் பாலசுப்பிரமணியன், இயற்கை விவசாயி மணி சுந்தர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Photos: Sathis Babu