நேற்று வரை கோடை விடுமுறையில் : இன்று முதல் பள்ளி வகுப்பறையில்

புதுச்சேரியில் பள்ளிகள்  திறப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பின்பு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டும் மூடப்பட்டும் வந்தது.

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் முடியும் முன்பே 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், கோடை விடுமுறை விடப்பட்டது. 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 3 தினங்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10ம் வகுப்பு வரை மற்றும் 12ம்  வகுப்புக்கு இன்று  பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை இறங்கியுள்ளது. வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன. கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்தார். இன்று முதலே  பாடபுத்தகம், சீருடை வழங்கவும், சிறப்பு பஸ்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.