இந்தியாவுக்குக் கேப்டனாவது என்றால் சாதாரணமா?  கேப்டனாக விட்டிருக்க மாட்டேன் – மதன்லால்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கே.எல்.ராகுல் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் கடைசி நேரத்தில் காயமடைந்து ஜெர்மனிக்கு சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அவரும் தொடரை தோற்காமல் 2-2 என்று டிரா செய்தார்.

ஆனால், கேப்டன்சியைப் பொறுத்தவரை அவருக்கு ஐபிஎல் தொடரிலேயே பார்த்த போது கத்துக்குட்டித் தனம் நிறைய வெளிப்பட்டது. கடந்த முறை ரபாடாவுக்கு ஓவர் இருந்த போதே ஆவேஷ் கானுக்குக் கொடுத்து தோனியை ஜெயிக்கவைத்தார் என்பதைப் பார்த்தோம், நடுவர் பிழை செய்தார் என்பதற்காக ஐபிஎல் 2022 தொடரில் வீரர்கள் அனைவரையும் பெவிலியனுக்கு அழைத்து கடும் சர்ச்சையில் சிக்கினார். கிரிக்கெட் ரீதியாகவும் ஏகப்பட்ட தவறுகள் இழைத்தார். தென் ஆப்பிரிக்கா தொடரிலும் நிறைய தவறுகள் இழைத்தார்.

இந்நிலையில் 1983 உலகக்கோப்பை வெற்றியாளர் மதன்லால் கூறும்போது, “நானாக இருந்தால் அவரை கேப்டனாக விட்டிருக்க மாட்டேன், அவரை தடுத்து நிறுத்தியிருப்பேன். ஏனெனில் அவரைப்போன்ற வீரருக்கு பொறுப்பை இன்னும் கொஞ்சம் தாமதமாகவே வழங்க வேண்டும்.

இந்தியாவுக்குக் கேப்டனாவது என்றால் சாதாரணமா? அது பெரிய விஷயம். அவர் இளம் வீரர், எங்கும் ஓடிப்போகப் போவதில்லை. அதிகம் விளையாட விளையாட முதிர்ச்சி கூடும். அடுத்த 2 ஆண்டுகளில் அவர் தன் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றினார் என்றால் அவர் கேப்டனாகலாம். முதிர்ச்சியும் வந்து விடும்.

தோனி மிகவும் கூலானவர் அதனால், கேப்டனாக சட்டென பொருந்தி விட்டார். விராட் கோலி அருமையான பேட்ஸ்மேன். பண்ட் மட்டையை சுழற்றக் கூடாது என்று நான் கூறவில்லை, இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் ஆடினால், நன்றாக இருக்கும் என்று தான் கூறுகிறேன்” என்றார்.