மண்ணிற்காக மக்களின் குரல் ஒலிக்க வேண்டும்!

– சத்குரு

மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என ஈஷா நிறுவனர் சத்குருவால் துவங்கப்பட்ட மண் காப்போம் இயக்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்தனர்.

நிகழ்ச்சியில் மண் அதன் வளத்தை இழப்பது குறித்தும், இது பற்றி உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்குருவின் காணொளி காட்சி தொகுப்பு இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்னர் மண் காப்போம் பாடலுக்காக மைதானத்தில் குழுமியிருந்த அனைவரும் நடனம் ஆடினர். நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.

மண் வளப் பாதுகாப்பிற்காக 27 நாடுகளுக்கு தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை முடித்த சத்குரு கொடிசியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சத்குரு பேசியதாவது: மண் காப்போம் இயக்கம் சார்பில் வெற்றிகரமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 27 நாடுகள், 9 மாநிலங்களுக்கு பயணம் செய்து முடித்துள்ளேன். பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது வரை 320 கோடி மக்கள் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளதாக கூறினார்.

அனைத்து உயிருக்கும் அடிப்படையான ஒன்று தான் மண். கடந்த 30 ஆண்டுகளாக மண் குறித்து நான் பேசியுள்ளேன். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன். அதனாலேயே இந்த பயணத்தை மேற்கொண்டேன். தற்போது கோவையில் வெற்றிகரமாக எனது பயணத்தை முடித்துள்ளேன் என தெரிவித்தார்.

எனது பயணத்தோடு மட்டும் இந்த விழிப்புணர்வு முடிந்து விடக்கூடாது எனக் கூறிய அவர், மண்ணைக் காக்க மக்களின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்த 8 அல்லது 10 வருடங்களில் மண்ணின் இயற்கை வளத்தை மீட்டெடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

மண் குறித்த அக்கறை மக்களுக்கு இருக்கிறது என்பதை அரசுக்கு உணர்த்த வேண்டும். அப்போது தான் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மண்ணிற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.