“அக்னிபாத் வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனத்தில் வேலை”

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வேதனையளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

4 வருடம் குறுகியகால சேவை அடிப்படையில் 21 வயதுக்கு உட்பட்ட இளம்வீரர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 75 % பேர் 4 வருடத்திற்கு பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படாது. இதன் காரணமாக அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது.

இந்தப் போராட்டத்தை தணிக்கும் நோக்கத்தில் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தில் பணி புரிந்துவிட்டு வருபவர்களுக்கு மஹிந்திரா குழுமம் வேலை தர தயாராக உள்ளது என இதன் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவரும் வன்முறைகள் வருத்தத்தை அளிக்கின்றது என கூறியுள்ளார். அக்னி வீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை சிறந்த வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வழங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“மஹிந்திரா குழுமம், அக்னி வீரர்களுக்கு என்ன பதவியில் வேலை வழங்கும்?” என அவரின் இந்தப் பதிவுக்கு ட்விட்டரில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு ஆனந்த் மஹிந்திரா, கார்ப்பரேட் துறையில், அக்னி வீரர்களுக்கான வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும், அக்னி வீரர்கள், தலைமைப் பண்பு, குழுவாகச் செயல்படுதல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் தொழில்துறையின் சந்தைக்கு ஏற்ற தொழில்முறைத் தீர்வுகளையும் வழங்குகிறார்கள். இது நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி வரை அனைத்தையும் உள்ளடக்கியது என ட்வீட் செய்துள்ளார்.