ஒற்றைத்  தலைமைக்கு வாய்ப்பு இல்லை?

எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற சூழ்நிலையே இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அரசியல் மாறியதால் அதிமுக இரட்டைத் தலைமை வசம் சிக்கியது.

ராணுவக் கட்டுப்பாட்டுடன் ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டிருந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இரட்டைத் தலைமைமையின் கீழும் பழக்கப்பட்டு விட்டனர். ஆனால், இரட்டைத் தலைமையால் தொடர்ந்து ஒற்றை முடிவுகளை எடுக்க முடியாத சூழலே பெரும்பாலான நேரங்களில் இருந்து வருகிறது. முரண்டு பிடித்து நின்றாலும் இறுதியாக இரட்டை இலைக்காக இரட்டைத் தலைமை ஒற்றை முடிவை எடுக்க வேண்டிய நெருக்கடி சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது.

இதற்கிடையே, சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நடந்த அதிமுக செயற்குழுக்கூட்டத்தில் ஜூன் 23 இல் நடைபெறும் பொதுக்குழு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் இக்கூட்டத்தில் குரல் எழுப்பியதாக எடப்பாடி பழனிசாமியின் மனசாட்சியான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன் பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலை உருவாகியுள்ளது.  இது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே உச்சகட்ட பனிப்போரை உருவாக்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. இதற்கு முன்பு பெரும்பாலான முடிவுகளை இரட்டைத் தலைமை எடுக்கும்போது ஒரு தலைமையாக இருக்கும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் விட்டுக்கொடுத்து தான் சென்றுள்ளார்.

குறிப்பாக, அதிமுக முதல்வர் வேட்பாளர், எதிர்கட்சித் தலைவர் விஷயத்தில் கூட அடம் பிடித்தாலும் பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் விட்டுக்கொடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, அனைத்து முடிவுகளும் தனக்கோ அல்லது தனது ஆதரவாளர்களுக்கோ சாதகமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

அதேநேரத்தில், பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை தனது ஆதரவாளர்களிடம் முக்கியமான நேரங்களில் கைவிரிக்கும் வகையில் தான் முடிவு எடுத்துள்ளார்.  ஏன், தனது சொந்த சகோதரரான ஓ.பி.ராஜா, சசிகலாவை சந்தித்தபோதுகூட அவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டார்.

ஆனால், நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த இரண்டு இடங்களில் தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோரை நிறுத்தவே எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்து வந்தார். ஜெயக்குமார் கடந்த 5 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் குரலாக ஒலித்து வருகிறார். தினகரன் தலைமை கழகத்தை கைப்பற்றிவிடுவார் என்ற பேச்சு எழுந்தபோது ஜெயக்குமார் தான் சென்னை அதிமுக நிர்வாகிகளை ஒருங்கிணைந்து அதை தடுத்து நிறுத்தினார்.

அதேபோல, கட்சிக்குள் சசிகலாவையும், கட்சிக்கு வெளியே ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசாமிக்காக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இப்போதும் செய்து வருகிறார். அண்மையில் கூட உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டு ஜெயக்குமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சு எழுந்தது.

ஆனால், பன்னீர்செல்வம், இரண்டில் ஒன்றில் தனதுஆதரவாளரை நிறுத்த வேண்டும் என முரண்டு பிடிக்கத் தொடங்கினார். இதையடுத்து ஜாதிய பலம் காரணமாக சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். அதேபோல, மீதமுள்ள ஒரு இடத்தில் எடப்பாடி பழனிசாமி தரும் பெயர் பட்டியலில் ஒன்றை தேர்வு செய்யும்படி பன்னீர்செல்வத்திடம் அதிமுக நிர்வாகிகள் கூறும்போது கூட முடியாது என மறுத்துவிட்டார்.

இப்படிப்பட்ட சூழலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய செயலர் தர்மருக்கு இந்த வாய்ப்பை பன்னீர்செல்வம் பெற்றுத்தந்தார். இது ஜெயலலிதா பாணியில் தொண்டருக்கு வாய்ப்பு அளிக்கிறார் ஓ.பி.எஸ். என்ற தோற்றத்தை உருவாக்கியது. அதேபோல, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர், சமஸ்கிருதம் விஷயத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது பன்னீர்செல்வம் அறிக்கைவிட்டவுடன் அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது திமுக அரசு.

அதேபோல, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகம் பள்ளி முதல்வர்கள் வசம் இருந்து மாவட்ட பிற்பட்டோர் சிறுபான்மை நல அலுவலர் வசம் மாற்றப்பட்டபோது, அதை கண்டித்தும் ஓ.பி.எஸ். அறிக்கைவிட்டுள்ளார். இதுபோல பன்னீர்செல்வமும் முக்கிய தலைவராக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். குறிப்பாக மாநிலங்களவை தேர்தலில் முன்மொழியக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் (மொத்தம் 10 பேர்) எண்ணிக்கை கூட இல்லாத பன்னீர்செல்வம், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தனது ஆதரவாளருக்கு பெற்றுக்கொடுத்ததை எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்கமுடியவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், பன்னீர்செல்வத்தை கட்சியில் ஓரங்கட்ட வேண்டும், அப்படி செய்யும்போது இரட்டை இலை முடக்கப்பட்டால்கூட, இரட்டை இலையை மீறியும் தலைவராக நிற்க முடியும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது.  காரணம், எடப்பாடி தொகுதியில் 1989 பேரவைத் தேர்தலில் கூட 30 சதவீத வாக்குகளை பெற்று சேவல் சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். அதேவேளை, 1996 பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் 27 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார். ஆகையால் இரட்டை இலையை மீறி தலைவராக தன்னால் ஜொலிக்க முடியும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கலாம்.

காரணம், 2021 பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு 40 சதவீத வாக்குகளும் கூட்டணியாக 75 இடங்களையும் பெற்றதால் பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகள் தன் பின்னால் தான் நிற்பார்கள் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்காக இருக்கக்கூடும்.

பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை இரட்டை இலையில் கையெழுத்திடும் அதிகாரமே அவருக்கு உச்சப்பட்ச அதிகாரம். ஒற்றைத் தலைமையாக இரட்டை இலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துவிட்டால் அதன்பிறகு பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகி விடவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம், இரட்டை இலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை விட்டுக்கொடுத்தால் தனக்கும், தனது மகனுக்கும் கூட சீட் பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்ச வேண்டிய சூழல் உருவாகலாம். எனவே, இரட்டை இலையில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருக்க வாய்ப்பே இல்லை.

ஏற்கெனவே, மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரே வாக்கில் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்து அதை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளது அதிமுக.  இதற்கான பதவிகாலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இப்போது இருவரும் தேர்வாகியுள்ளனர். இதை பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில், பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்தின் அனுமதியை மீறி ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என எடப்பாடி ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினால், நிச்சயமாக தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் முறையிட்டு இரட்டை இலையை முடக்கும் சூழல் உருவாகலாம்.

காரணம், 1997 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசர் போட்டிப் பொதுக்குழுவை கூட்ட, தான் தான் பொதுச்செயலர் என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்தார். அந்த நேரத்தில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர் திருநாவுக்கரசருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேபோல,  தமிழ்நாடு, கர்நாடகா,  புதுவை ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 8 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் திருநாவுக்கரசருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அப்படி இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலருக்கு தான் கட்சிக் கொடி, சின்னம் வழங்க வேண்டும் என்ற விதியை சுட்டிக்காட்டி ஜெயலலிதாவுக்கு தான் கட்சிக் கொடி, சின்னம், கையெழுத்திடும் உரிமையை வழங்கியது. இப்படிப்பட்ட சூழலில் பன்னீர்செல்வம்,  எடப்பாடி ஆகிய இருவருமே தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் நிலையில், நிச்சயமாக இரட்டை இலையை முடக்கும் வாய்ப்பு பன்னீர்செல்வத்துக்கு அதிகம். இந்நிலையில், கட்சி உடையாமல் இருக்க வேண்டுமெனில் ஒற்றைத் தலைமை கோஷத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் கைவிட்டே தீர வேண்டும்.

ஒருவேளை இரட்டை இலை முடக்கப்பட்டு தனிக்கட்சியாக நின்றால் எடப்பாடி பழனிசாமி ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்துடன் ஒரு தலைவராக நிற்க முடியுமே தவிர, 2026 பேரவைத் தேர்தலில் ஸ்டாலினை தோற்கடிக்கும் முதல்வர் வேட்பாளராக நிற்க இயலாது. கட்சியை உடைப்பதில் எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே இருவேறு கருத்து உள்ளது

ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றவர்கள் இரட்டை இலை விழுந்தாலும் பரவாயில்லை என கணக்கு போடுகின்றனர். ஆனால், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்றவர்கள் இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்ற கருத்தில் தான் உள்ளனர். பன்னீர்செல்வத்துக்கும், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்,  ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி., தர்மர் எம்.பி., ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் போன்ற ஆதரவாளர்கள் வட்டம் உள்ளது.

எனவே, இவர்கள், எடப்பாடி மற்றும் அவரது ஆதர்வாளர்களை சமாதானப்படுத்துவார்களா அல்லது இரட்டை இலையை முடக்கும் முடிவு எடுத்துவிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பன்னீர்செல்வம் செல்வாரா என்பதை ஜூன் 23ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.S

மூன்றாவது முறையாக முடங்குமா இரட்டை இலை?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, அதிமுகவில் ஒற்றைத் தலைமை தவிர்க்க முடியாத சூழலில் தான் இரட்டைத் தலைமை உருவானது.

தனது தம்பியையே விட்டுக் கொடுத்த ஓ.பி.எஸ்., இரட்டை இலையில் கையெழுத்திடும் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்கமாட்டார்.

எடப்பாடி பழனிசாமி இரட்டை இலையை மீறி தலைவராக வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டதாகவே தெரிகிறது. ஆகையால் பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மீண்டும் ஒற்றைத் தலைமைக்காக தீர்மானம் நிறைவேற்றினால் மூன்றாவது முறையாக இரட்டை இலை முடங்கும் அபாயம் உருவாகும் என்றார் ரிஷி.