நேரு கல்லூரியில் ஜுன் 24 விமான கண்காட்சி துவக்கம்

நேரு காலேஜ் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் அண்டு அப்ளைடு சயின்சஸ் சார்பில் கோவையில் ஏரோபிளஸ் 2022 என்ற பெயரில் விமான கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் கூறியதாவது: கோவையில் ஏரோபிளஸ் 2022 என்ற பெயரில் விமான கண்காட்சி கோவை நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜுன் 24 துவங்கி வரை 3 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இக்கண்காட்சி கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூரில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.

முதல் நாளான ஜுன் 24 ம் தேதி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் காலை 10.30 மணி முதல் 3.30 மணி வரை அனுமதியளிக்கப்படும். ஜுன் 25 மற்றும் 26 ம் தேதி பொது மக்களுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அனுமதியளிக்கப்படும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிப்பது அரிதான செயலாகும். விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை மாணவ மாணவியர்களும் பொது மக்களும் தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

மேலும் இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர இந்த கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 5 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக அணிவகுக்க உள்ளன.

மெய்நிகர் காட்சி வாயிலாக ஏர்போர்ட் சுற்றிபார்த்தல், 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விமான நிலையம், விமான உதிரிபாகங்கள் மற்றும் எண்ணற்ற அரிய விமானங்களின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் வைக்கப்படவுள்ளன.

விமான ஆய்வுக் கூடங்கள், மற்றும் விமானம் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்டசாலிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஏறி அமர்ந்து மகிழலாம். குடும்பத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எனக் கூறினார்.