விற்பனைக்கு வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் மூடப்பட்டு உள்ள நிலையில், ஆலையை விற்பனை செய்யவுள்ளதாக வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 2018 இல் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018 மே 28 ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதை எதிர்த்து ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும், உயர் நீதிமன்றம் ஆலை மூடலுக்கான அரசின் உத்தரவு தொடரும் என தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா அதிகரித்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜனை இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் முன் வந்தது. அதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. அதன்படி, 3 மாதம் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆலை மீண்டும் மூடப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.