வெளியானது 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

12ம் வகுப்பு பொது தேர்வில் 93.76% மாணவர்களும்,10ம் வகுப்பு தேர்வில் 94.07% மாணவர்ளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெறாத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வும்,
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும், 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடத்தையும், 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3 வது இடத்தையும் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் (97.22%) தேர்ச்சி விகிதம் அதிகமாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2 வது இடத்தையும், 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3 வது இடத்தையும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.