அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு

கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் மெல்ல மெல்ல  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000-த்தை தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ் நாட்டில்  நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி, ‘இன்று ஒரே நாளில் 15,742 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,59,586 பேராக  அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 208 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா பாதித்து 2,694 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இன்று மட்டும் சென்னையில் 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும், கோவையில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து  அமைச்சர் மா. சுப்பிரமணியன், “18 -59 வயதானவர்கள் இரு டோஸ் கொரோனா வேக்சின் போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால் அவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி பூஸ்டா் டோஸ் போட்டுக் கொள்ளலாம். இருப்பினும், கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் பலரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால், சி.எஸ்.ஆா். நிதி பங்களிப்புடன் இலவச பூஸ்டா் டோஸ் பணியை மாதவரத்தில் ரோட்டரி சங்கம் விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக, தெரிவித்தார்.