‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

– மத்திய அமைச்சருக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், டெல்லியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அவர்களை நேரில் சந்தித்தார்.

அப்போது, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை விரைவுப்படுத்துவது தொடர்பாக கடிதம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஓராண்டாக, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லை. இதனை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை, திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, தமிழக சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தினேன். ஆனாலும் பலன் இல்லை. எனவே, மத்திய அமைச்சரான தாங்கள், தமிழகத்தில் குறிப்பாக கோவைக்கு நேரில் வருகை தந்து, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். பணிகளை விரைவுப்படுத்தி, திட்டமிட்ட காலத்திற்குள் ‘ஸ்மார்ட் சிட்டி ‘ திட்ட பணிகளை முடிக்க வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.