ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 34 வது பட்டமளிப்பு விழா எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஆர் செவிலியர் நிறுவனத்தின் டீன் டாக்டர். ராமு கலந்து கொண்டார். எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி தலைமை தாங்கினார்.

கல்லூரியின் முதல்வர் நிர்மலா வரவேற்புரையாற்றினர். இவ்விழாவில் முதுகலை பட்டதாரிகள் 13 மற்றும் 206 இளங்கலை பட்டதாரிகளுக்குச்  சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 12 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் கிரிஜா குமாரி சிறப்பு விருதுகளை அறிவித்தார்.

இளங்கலை பட்டப்படிப்பில் 2015, 2016, மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பயின்று முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களான ராஜா, சந்தியா மற்றும் ரஹ்மத்நிலோபர் நிஷா ஆகியோருக்கு தலைசிறந்த மாணவருக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

முதுகலை பட்டப்படிப்பில் 2017, 2018, மற்றும் 2019 ஆண்டுகளில் பயின்று முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவியர்களான கீர்த்தி, சுவிதா மற்றும் காயத்ரி ஆகியோருக்கு தலைசிறந்த மாணவருக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் தமது உரையில் கூறியதாவது: செவிலியர் துறை மகத்தான துறை. செவிலியர்கள் தன்னம்பிக்கை, அறிவுத்திறன் மற்றும் செயல்திறனுடன் பணிபுரிய அறிவுறுத்தினார். தங்கள் சேவையின் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார். மேலும் கொரோனா காலகட்டத்தில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை பெரிதும் பாராட்டினார்.

இவ்விழாவில் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.