இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றை விரைவில்: ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் இருந்து 4 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5 ஜி தொழில்நுட்ப பயன்பாடு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏன் என்றால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 4 ஜி வருகைக்கு பின் மக்களின் தினசரி வாழ்க்கை முறையில் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டது. இந்த தொழில்நுட்பம் அனைத்தையும் எளிமையாக்கியது.

மொபைல் ஆப்பின் மூலமே தகவல் பறிமாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடிய தொழில்கள் எண்ணற்ற முறையில் உருவானதோடு, எல்லாத் தொழில்களும் இணையத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே 5 ஜி தொழில்நுட்ப பயன்பாடு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்து வருகிறது.

இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் வைத்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதன் மூலம் 5 ஜி சேவை பொதுமக்களுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.

5 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தலைமுறை தொழில்கள், புதிய நிறுவனங்கள் உருவாகும். அதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுகிறது. 4ஜி சேவையை விட பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் நாட்டின் மூன்று முக்கிய நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஜியோ ஆகியவை பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.