ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ரத்த தான முகாம்

உலக ரத்த தானம் தினத்தை கொண்டாடும் வகையில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் சி.இ.ஓ ராம் குமார் மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் சுகுமாரன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இரத்த தானம் செய்தனர். இம்முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நன்கொடையாளர்களுக்கு அவர்களின் பங்களிப்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, ஆலோசகர் ஹீமாடோ – புற்றுநோயியல் நிபுணர் ஸ்ரீதர் கோபால் பேசுகையில்: இந்தியாவில் 130 கோடி மக்கள் வசிக்கிறோம். நம் நாட்டில் இரத்த தானம் செய்ய 1% மக்கள் தேவை, அதாவது 1.3 கோடி பேர், ஆனால் அது நடப்பதை நாம் பார்க்கவில்லை, ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு 20-30 லட்சம் பற்றாக்குறை உள்ளது. தொற்றுநோய் காரணமாக இந்த பற்றாக்குறை சமீப காலங்களில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அவர் மேலும் கூறியதாவது: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள், டெங்கு நோயாளிகள், தலசீமியா, ரத்தப் புற்றுநோய், ரத்தம் தொடர்பான நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ரத்தம் தேவைப்படுவதால், அதிக ரத்த தானம் செய்பவர்கள் தேவைப்படுவார்கள்.

ரத்த தானம் செய்வதன் மூலம் ஒருவரின் உடலில் புதிய ரத்தத்தை இனப்பெருக்கம் செய்ய முடிவதோடு, இதயம் தொடர்பான பாதிப்பு மற்றும் சில புற்றுநோய் அபாயங்களைக் குறைக்க முடிகிறது என்று கூறினார்.