இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்; விரைவில் ஆலோசனை  

இந்தியாவில், கடந்த 3 மாதங்களாக  கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை நடக்க இருப்பதாக தெரியவருகிறது.

தமிழகம், கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட  மாநிலங்களில், கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பொது இடங்களில் பொது மக்கள் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நான்காவது அலை தொடங்கி விட்டதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 8,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 8,329 பேருக்கும், நேற்று 8,582 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 10 பேர் பலியாகி உள்ள நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,771 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, தற்போது, நாடு முழுவதும் 47,995 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.