கல்வி சிறந்த தமிழ்நாடு!

இந்திய மாநிலங்களில் கல்வியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அதற்கு காரணம் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இலக்கியப் பின்புலம் என்பதோடு நவீன கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதற்குரிய இடத்தை கொடுத்த ஆட்சியாளர்கள் என்றும் சொல்லலாம்.  தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள், அதனை செயல்படுத்திய கல்வியாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் இதில் பங்கு உண்டு.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்த சென்னை மாகாண கல்வி அமைச்சர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், கல்வி கண் திறந்த காமராசர் தொடங்கி தற்போது உள்ள ஆட்சியாளர்கள் வரை பல வகையிலும் பலரும் பங்களித்துள்ளனர். அதனை நிரூபிக்கும் வகையில் இன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் கூட சாதனை தமிழர்களை காணமுடிகிறது.

இன்று அந்த நிலையில் சிறுசிறு அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. மத்தியில் ஒரு ஆட்சியும், மாநிலத்தில் ஒரு ஆட்சியும் இருப்பதால் ஏற்படக்கூடிய அதிர்வா அல்லது மத்திய அரசு, மாநில அரசு என்று இரண்டு பட்டியலிலும் கல்வி வருவதால் உண்டான வழக்கமான அதிர்வா என்று தெரியாத நிலை தற்போது நிலவுகிறது.

ஏனென்றால் தற்போது உள்ள மத்திய அரசு, புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. மிகப் பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இல்லை. ஆனால் தமிழகத்தில் தொடக்கம் முதலே இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் தொடர்புடைய நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நீட் தேர்வு கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதியில் அளித்திருந்தது. ஆனால் விக்ரமாதித்தன் வேதாளம் போல அந்த சிக்கல் இன்னும் தொடர்கிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக ஆளுநர் ரவி, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தேசிய கல்வி கொள்கை குறித்து பேசுவதும், அதற்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் எதிர்வினை ஆற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வழிக்கல்வி அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால் போட்டித்தேர்வு என்று வரும்பொழுது இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழி கற்க வேண்டிய அவசியமே இல்லை எனும் நிலை உள்ளது. ஆங்கிலம் நமக்கு வாய்ப்பு என்பதே தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. 

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் மாநாடு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. அதில் பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இருவரும் இதில் பங்கேற்கவில்லை. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இது நடைபெற்றதாக தெரிகிறது. இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை அமலாக்கம், பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேற்சொன்னவை எல்லாம் அரசியல் சார்ந்த முடிவுகளாகும். இதில் மக்களின் எதிர்காலம், மாணவர்களின் எதிர்காலம், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் மாறுதல்கள், பாதிப்புகள் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு என்று இரண்டு பட்டியலிலும் வரும் துறைகளில் இந்த சிக்கல் ஏற்படுவது இயல்பு. ஆனால் கல்வி போன்ற நாட்டின் எதிர்கால வளர்ச்சியோடு நேரடி தொடர்பு கொண்ட துறையில் இதுபோன்ற சிக்கல்கள் உடனடியாக களையப்பட வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வழிக்கல்வி அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால் போட்டித்தேர்வு என்று வரும்பொழுது இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழி கற்க வேண்டிய அவசியமே இல்லை எனும் நிலை உள்ளது. ஆங்கிலம் நமக்கு வாய்ப்பு என்பதே தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரும்பான்மையோருக்கு தமிழில் நல்ல முறையில் எழுதவும் படிக்கவும் தெரியாது. அவர்களில் பலர் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதுதான் உண்மை. 2 ஆண்டு கொரானாவுக்கு பிறகான இடைவெளியில் தமிழக அரசு கல்வித் துறையின் செயல்பாடுகளிலும் சில சின்னச் சின்ன தடுமாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் இனிமேல் பள்ளிகளில் செயல்படாது, அங்கன்வாடிக்கு மாற்றப்படும் என்று அறிவிப்பு வந்தது. பல தரப்பினரின் எதிர்ப்பு வந்த பிறகு அவை மீண்டும் அரசுப்பள்ளியில் செயல்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

கொரோனாவில் நடைபெற்ற இடைநிற்றல், கல்வி துறையை பாதித்துள்ளது. இந்த நிலையில் இதன்  நடைமுறை எடுத்துக்காட்டாக பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வு எழுத வந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது கவலைக்குரியதாகும். இந்த குறைகளை சீர்செய்யும் வகையில் கல்வித் துறை சார்ந்த செயல்பாடுகள் அமைய வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு என்பதை தாண்டி மக்கள் அரசாக கல்வித் துறையைப் பொறுத்தவரை அரசாங்கங்கள் செயல்பட வேண்டும்.