அனைவருக்கும் வீடு திட்டத்தில் கோவைக்கு ஸ்பெஷல்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் “அனைவருக்கும் வீடு” கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  அதில், கோவைக்கு மட்டும் தனி கவனம்  அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கோவையில்  45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து , ”அனைவருக்கும் வீடு” என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 18.45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒதுக்கீடுகளை முதல்வர் இன்று வழங்கியுள்ளார்.  இனி அடுத்த வரும் நாட்களில் எஞ்சிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.

அதனைத்தொடந்து,  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்ச ரூபாய் மானியத்துடன் வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.