என்ன டாக்டர் இல்லையா! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி

மதுரை வாடிப்பட்டியில் உள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு பணியில் இல்லாத மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில், கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது. என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவி மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யும் இடத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

சுகாதாரத்துறையினரிடம் கொரோனா மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவு பரவி வரும் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்தும், மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம்  வாடிப்பட்டியில்  உள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார நிலையத்தில்  ஆய்வு நடத்த சென்ற போது, அங்கே ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர்.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில்  மருத்துவர் பூபேஸ்குமார்  இல்லாததால் அமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்தார். வழக்கமாகவே, மருத்துவர் 2 மணி நேரம் தாமதமாகத்தான் வருவதாகக் கூறி அங்கிருந்தவர்கள் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர் பூபேஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மதுரை மாவட்ட பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.