சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது

சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்ற  கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை, தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது. சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலின் மூலம் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில்  2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் அனுமதி இல்லாததால், திருப்பி அனுப்பப்பட்டது. புதுச்சேரி அரசின் அனுமதியின்றி வந்ததை அடுத்து சொகுசு கப்பலை கடலோர காவல்படை திருப்பி அனுப்பியது.

இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் மதுக்கூடம், நடனம், சூதாட்டம் உள்ளிட்ட கலாச்சாரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்கும் என்பதால், இதனை அனுமதிக்கக்கூடாது என்று, புதுச்சேரியில்  உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறுகையில் , இந்த சொகுசு கப்பல் தொடர்பாக எந்தவித தகவலும் புதுவை அரசுக்கு இல்லை. அனுமதியும் அளிக்கப்படவில்லை என்றும், சொகுசு கப்பல் வந்தாலும் சூதாட்டம் போன்ற கலாச்சாரத்துக்கு எதிரான நிகழ்வுகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது என்று, கூறினார்.

புதுவை அரசு தரப்பிலும் அதற்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த சொகுசு கப்பல் இன்று காலை புதுச்சேரி அருகே கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது. புதுச்சேரி வம்பகீரபாலயம் கடற்கரை அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் அந்த சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலை கடற்கரை பகுதியில் இருந்து பொதுமக்கள் பார்வையிட்டனர். புதுவை அரசு சார்பில் இந்த கப்பலுக்கு அனுமதி  தரவில்லை என்பதால், ஆழ் கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடலோர காவல்படையினரும் புதுச்சேரி எல்லைக்குள் நுழைய விடமால் தடுத்து நிறுத்தி திருப்பு அனுப்பியனுப்பினர்.