2023 இல் கடும் உணவு நெருக்கடி ஏற்படும் – ஐ.நா.எச்சரிக்கை

வரும் 2023 ஆம் ஆண்டு பெரும் உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், அதனைத் தடுக்க குறைவான நேரமே உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

உக்ரைன் ரஷியா போரால், உணவு பாதுகாப்பு, ஆற்றல், எரிசக்தி மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றிய ‘உலகளாவிய நெருக்கடி பதில் குழுவின்’ சமீபத்திய அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் 94 நாடுகளில் குறைந்தது 1.6 பில்லியன் மக்கள் நிதி, உணவு அல்லது எரிசக்தி ஆகியவற்றுள் ஏதாவது ஒரு துறையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்க்கு முன்னர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களின் எண்ணிக்கை 135 மில்லியன் இருந்தது. தற்போது இது இரு மடங்காகி இரண்டே ஆண்டுகளில் 276 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது மேலும், 323 மில்லியனாக மேலும் அதிகரிக்கக்கூடும்.

உக்ரைன் போரினால் ஒவ்வொரு நாளும் புதிய துன்பத்தை அந்த மக்கள் அனுபவிப்பதோடு, அதுவே, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, பசி பஞ்சம் பட்டினி போன்றவற்றை அலைகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் கூறியதாவது: தற்போது இருக்கும் சூழ்நிலையில், மனித உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை காக்க உலக நாடுகள் இப்போதே செயல்பட வேண்டும். எந்தவொரு நாடும் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியாத கடுமையான வாழ்வாதார செலவுக்கான ஒரு நெருக்கடியை இந்த போர் உருவாக்கி உள்ளதாக கூறினார்.