ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,809 பேர் வாக்காளர்களாக உள்ளனர் (776 எம்.பி.க்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்கள்). 776 எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,700; 4,033, எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,231. மேலும் இந்தத் தேர்தலில் மொத்தம் 10,86,431 வாக்குகள் பதிவாக உள்ளன.

ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும்.

குடியரசுத் தலைவருக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஜூன் 29- ஆம் தேதி கடைசி நாள். வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30- ஆம் தேதியும், வேட்பு மனுத் திரும்ப பெற ஜூலை 2- ஆம் தேதி கடைசி நாள். புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை மாதம் 25- ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவித்துள்ளார்.