தண்ணீர் இல்லாததால் கால்நடைகளை விற்க முடிவு-விவசாயிகள் சோகம்!

கோவை, பருவமலை பொய்த்ததால் நிலவும் வறட்சியின் கோரதாண்டவம் மற்றும் தீவனங்களின் விலை உயர்வு போன்றவற்றால், கால்நடைகளை விற்போரிடம், அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் பருவமழைகள் பொய்த்துவிட்டதால், 140 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியதுடன், கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களின் வரத்தும் குறைந்துவிட்டது. கோவை மாவட்டத்தில் அன்னுார், கோவில்பாளையம், தொண்டாமுத்துார், சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் போன்ற தீவனப்பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

தற்போது, மழை இல்லாததால், தீவனப்பயிர்களின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு மாற்றான, கோதுமை தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு உள்ளிட்ட கலப்பு தீவனங்களின் விலையும்அதிகரித்துள்ளதால்,கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான கறவை மாடுகள் உள்ளன. தற்போது, மனிதனுக்கே தண்ணீர் இல்லாத நிலையில், கலப்பு தீவனங்களுக்கு முக்கிய தேவையான தண்ணீர் கிடைக்காமல் மாடுகளுக்கு உணவளிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

வேறுவழியின்றி விவசாயிகள் சிலர் கால்நடைகளை விற்றும் வருகின்றனர். இவற்றை சாதகமாக பயன்படுத்தி, மிகக் குறைந்த விலைக்கு கால்நடைகளை வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்; காலக்கொடுமையால் கேட்கும் விலைக்கு சிலர் மாடுகளை விற்றும் வருகின்றனர்.