சிறுதொழில் காவலருக்கு ‘வளம் தரும் வள்ளல் விருது’!

சிறு தொழில் முனைவோருக்கு சிறந்த வழிகாட்டியாகவும், கோவையின் தொழில் பிதாமகனாக விளங்கும் ஏ.வி. குழுமத்தின் நிறுவனர் அப்பநாயக்கன் பட்டி வெங்கிடசாமி வரதராஜன் (ஏ.வி.வி) அவர்களுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோவை, சார்பாக ‘வளம் தரும் வள்ளல்’ என்ற விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு இந்த அரிய விருதினை டெக்ஸ்டூல் பால சுந்தரம் மற்றும்
என். மகாலிங்கம் ஆகியோர் பெற்றுள்ளனர். தற்போது இந்த விருது ஏ.வி.வரதராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை, தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

ஏ.வி.வி.யின் சிந்தனை வித்தியாசமானது!

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரிக்கால் லிமிடெட்டின் நிறுவனர் விஜய் மோகன் ஏ.வி.வரதராஜன் குறித்து பாராட்டி கூறுகையில்:

ஏ.வி. வரதராஜன் கோவை தொழில் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒரு தொழில் முனைவோராக தன் வாழ்வில் உயர்ந்த அவர், பல தொழில் முனைவோர்களை உருவாக்கியும் உள்ளார். தொழில்துறை குறித்து அவர் சிந்திக்கும் யோசனைகளே வித்தியாசமானது.

அவர் ஏற்படுத்திய தொழில் கண்காட்சியின் மூலம் பல்வேறு இயந்திரங்களை பற்றி சிறு, குறு தொழில் முனைவோர்களால் அறிய முடிந்தது. தொழில்நுட்ப இயந்திரங்களை காட்சி படுத்துவதற்காகவே தனியாக ஒரு வளாகம் வேண்டும் என நினைத்து, ஏ.வி.வி மற்றும் அவரது குழுவினர் அதற்காக முயற்சித்து கொடிசியா என்ற ஒரு பெரிய தொழிற் காட்சி வளாகத்தை உருவாக்கியுள்ளனர்.

எளிமையை மட்டுமே தனது அடையாளமாக கொண்டிருக்கும் அவர், தமது கல்விக்கு உதவிய ஜி.ஆர்.தாமோதரன் அவர்களை இன்றளவும் நினைவில் வைத்து நன்றி உணர்வுடன் இருக்கிறார்.

தான் மட்டும் உயராமல், தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் கைதூக்கி உயர்த்தி விடுவதோடு, பல வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். மேலும், இந்த கோவை நகரின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

பி.எஸ்.ஜி – ஜி.ஆர்.டி அறிவியல் அருங்காட்சியகம் தொடர்பான வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தொலைநோக்கு பார்வை கொண்டவராக விளங்கும் அவர், சிறந்த தலைவராகவும் தன்னை நிரூபித்துள்ளார் எனப் பேசினார்.

விருது வழங்கும் நிகழ்வில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின், முன்னாள் தலைவர் பாலசுந்தரம் பாராட்டுப் பட்டயம் வாசித்தார்.

பின்னர், ஏ.வி வரதராஜனுக்கு சிறப்பு விருந்தினர் பாராட்டுப் பட்டயம் வழங்க, இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ‘வளம் தரும் வள்ளல்’ விருதினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கோவை தொழில் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஏ.வி. வரதராஜனை வாழ்த்தினார்கள்.

வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்:

2003 ஆம் ஆண்டு பாலசுந்தரம் அவர்களுக்கும், 2008 ஆம் ஆண்டு என். மகாலிங்கம் அவர்களுக்கும் வழங்கப்பட்ட இந்த ‘வளம் தரும் வள்ளல்’ விருது 14 ஆண்டுகள் கழித்து ஏ.வி. வரதராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் மூன்று பேருக்கு தான் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் பொழுது ஏ.வி.வி. யின் குணநலன் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை உணர முடிவதாக கூறினார்.

தொழிலுக்கும், கவிதைக்கும் தொடர்பு இருக்காது என நான் நினைத்ததுண்டு. ஏனென்றால் கவிஞன் என்பவன் கற்பனையில் வாழ்பவன், கனவுகள் காண்பவன்; ஆனால் தொழில் என்பது நடைமுறையான ஒன்று. ஆனால் இந்த இரண்டும் கலந்தவராக ஏ.வி.வரதராஜன் இருக்கிறார்.

மிக உயரிய விருதை பெற வெற்றி மட்டும் போதாது. அதையும் தாண்டி உயரிய குணம் தேவை. வாழ்க்கையில் நமக்கு கைகொடுத்து உதவியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி நமது வெற்றி ஒன்றுதான். அது போல நம்மை அவமதித்தவர்கள் முன்னாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அதை விட ஒரு பெரிய செயல் இருக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

வெற்றி மட்டுமே வாழ்க்கை ஆகாது, என்பதை உணரும்போது தான் மனம் பக்குவப்பட்டு போகிறது. இன்றைக்கு ஒரு செயலை செய்தால் அதற்கான விளைவு சில காலங்களில் நம்மை வந்து அடையலாம். ஆனால், இன்று இருக்கக்கூடியவர்கள் இன்றைக்கு விதை போட்டால் நாளையே அறுவடை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தொலைபேசி, மடிக்கணினி, தொலைக்காட்சி ஆகிய தொழில் நுட்பங்கள் நம் திறமைகளை அழித்துவிடும் ஒன்றாக இருக்கிறது என்ற தன் கருத்தினையும் பதிவிட்டார்.

ஒரு மனிதனால் வாழ்வில் தனியாக மட்டுமே வெற்றிபெற முடியாது. அவன் வெற்றிக்கு அவனை சுற்றி உள்ளவர்களும் உறுதுணையாக இருக்கின்றனர் எனக் கூறிய அவர்,
ஏ.வி. வரதராஜன், 60 ஆண்டு காலமாக ஒரு நிறுவனத்தை நடத்தி தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் உயர்த்தி வாழ்வில் வெற்றி அடைந்துள்ளார் என்றார்.

மேலும் குடும்பம் என்ற அமைப்பு சரியாக இல்லை என்றால் நாம் பெறும் வெற்றி அர்த்தமற்றதாக இருக்கும். வாழ்க்கையில் எவற்றிற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

தொழில்நுட்பம் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்!

விருதினைப் பெற்றுக் கொண்ட ஏ.வி.வரதராஜன் தனது ஏற்புரையில் பேசியதாவது:

என் வெற்றிக்கு நான் ஒருவன் மட்டுமே காரணம் இல்லை, அதற்கு முன் ஒரு பெரிய குழுவே உள்ளது எனக் கூறினார்.

தன்னோடு இணைந்து பணியாற்றிய பணியாளர்களின் சிந்தனை, அறிவாற்றல், உதவி, உழைப்பு, வியர்வை ஆகியவற்றை கலந்து பக்குவமாக உருவாக்கப்பட்ட கலை நுட்பமான சிலையாக தனக்கு வழங்கப்பட்ட விருதினை பார்ப்பதாக நன்றியுடன் தெரிவித்தார்.

மேலும் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவரின் உழைப்பிற்கான அங்கீகாரம்தான் இந்த விருது என்றும் கூறினார்.

தன் வாழ்க்கைப் பயணம் குறித்து மிகவும் சுவாரசியமாக எடுத்துக் கூறிய அவர், தொழில் துறையில் தான் கண்ட ஏற்ற இறக்கங்களை பற்றி எடுத்துரைத்தார்.

மேலும், இந்தியாவில் 40 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்றும், வளரும் நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்ற தன் வருத்தத்தையும் பதிவு செய்தார்.

அனைவருக்கும் ஒரு தொழில் இருக்க வேண்டும். அதற்கு வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.