கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நுரையீரல் சம்மந்தமான கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை துறை சார்பாக நுரையீரல் சம்மந்தமான (ரிஜிட் பிராங்கோஸ்கோபி) தொடர்பான செயல்திறன் பயிற்சி கருத்தரங்கு கேஎம்சிஹெச் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் இத்தாலி நாட்டில் இருந்து இரு சர்வதேச வல்லுனர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து 10-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இத்துறையில் தங்களது அறிவுத்திறனையும் மருத்துவ நுணுக்கங்களையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். இவர்களுடன் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை துறை குழுவினர் டாக்டர் சாந்தகுமார், டாக்டர் வேணுகோபால், டாக்டர் தீபக், மற்றும் டாக்டர் ராமநாதன் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மூச்சுகுழாய் குறித்து பயிற்சி பெறுவதற்காக இளம் நுரையீரல் மருத்துவர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்துகொண்டார்கள். மே 5 ஆம் தேதியும் இந்த பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது.

கே.எம்.சி.ஹெச் நுரையீரல் நிபுணர்கள் இதுகுறித்து கூறியதாவது: நுரையீரல் மருத்துவத்தில் இண்டர்வென்ஷனல் பல்மனாலஜி என்பது புதிய கண்டுபிடிப்புகள், அதிநவீன மருத்துவ நுட்பங்களுடன் மிகவேகமாக வளர்ந்துவருகிறது.

பிராங்கோஸ்கோபி என்பது காமிரா பொருத்திய ஒரு மெல்லிய டியூபை செலுத்தி நுரையீரல் உட்புறத்தை நன்கு பார்க்க உதவும் எண்டோஸ்கோபி முறை ஆகும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய், காசநோய், நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் நோய்களை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கான சிகிச்சைகளை சிறந்தமுறையில் மேற்கொள்ள முடியும்.

நோயாளிகளின் செளகரியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக கடந்த சில வருடங்களாக இத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகியுள்ளன மற்றும் பல புதிய மருத்துவ உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மூச்சுகுழாய் மற்றும் நுரையீரல் சிகிச்சை துறையில் ஏற்பட்டு வரும் அதிநவீன முன்னேற்றங்கள், நவீன சிகிச்சை முறைகள், நுட்பங்கள் குறித்து இத்துறை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் அறிந்துகொண்டு பயன்பெறவேண்டும் என்பதே இந்த சர்வதேச பயிற்சி பட்டறையின் நோக்கமாகும் என தெரிவித்தனர்.

நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து உரையாற்றிய கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி தனது உரையில், கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச தரத்திற்கு இணையாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சேவைகள் அளித்து வருகிறது, எண்டோபிரிங்கியல் அல்ட்ராசவுண்ட் (ஈபஸ்), ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, கிரியோஅபலேசன் முதலான பல்வேறு மருத்துவ வசதிகளை தென் தமிழகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய முன்னோடி மருத்துவமனையாக கே.எம்.சி.ஹெச் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். இதுபோன்ற சர்வதேச அளவிலான மாநாடு மற்றும் செயற்திறன் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த கே.எம்.சி.ஹெச் நுரையீரல் சிகிச்சை துறை குழுவினரை அவர் பாராட்டினார்.