கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் தேடப்பட்ட அழகிய நகரம்?

உலகின் பல அழகிய, ரம்மியமான சூழலை நம் அனைவராலும் நேரில் கண்டு ரசிக்க முடியாது. ஆனால் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் நாம் இருந்த இடத்தில் இருந்தே விரும்பும் நகரத்தின் அழகிய தோற்றத்தைக் கண்டு களிக்கலாம்.

இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது இதில் மக்கள் அதிகம் தேடிய நகரம் பற்றிய தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் அழகிய நகரங்களான நியூயார்க், பாரிஸ் மற்றும் லண்டன் போன்றவை தான் இடம் பெற்றிருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் வரக்கூடும். ஆனால் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா தான் கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட ஸ்ட்ரீட் வியூவில் இந்தோனேஷியா மிகவும் பிரபலமான நாடாக இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடுகளின் தரவரிசையில் கொமோடோ டிராகன்களுக்கு பிரபலமான இந்தோனேஷியா முதலிடம் வகிக்கிறது, அதே நேரத்தில் அதன் தலைநகரான ஜகார்த்தா ஸ்ட்ரீட் வியூ அதிகம் பார்வையிடப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டோக்கியோ, மெக்சிகோ சிட்டி, சாவோ பாலோ மற்றும் பியூனஸ் அயர்ஸ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அதிகம் தேடப்பட்ட நகரங்களின் பட்டியலில் சேர்ந்து உள்ளது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் புர்ஜ் கலீஃபா, இரண்டாமிடத்தில் ஈபிள் டவர் மற்றும் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால் இடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.