சாதிகள் இல்லையடி பாப்பா

மகாகவி பாரதியார் எழுதிய பாடல்களில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாடல், நம் பாட புத்தகத்திலே பாடமாக உள்ளது.  அதனை குழந்தைகளுக்கும்  கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், சாதிகள் இல்லையென்று கற்றுத்தரும் பள்ளிகளில் தான், முதலில் சாதி சான்றிதழ் கேட்கப்படுகின்றன.

இந்தியாவில் சாதி சான்றிதழ் அவசியமான ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் கல்வியில் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என அனைத்துக்கும் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. இதனால், குழந்தைகள் பிறந்த உடனே பெற்றோர்கள் சாதிச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

சாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு நீங்கும் என்ற அடிப்படையில், கோவையில் பெற்றோர் ஒருவர், தங்களின் மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் பெற்றுள்ளார்.

கோவையை சேர்ந்த  நரேஷ் கார்த்திக், தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்ற போது, சாதி சான்றிதழில் அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடவில்லை. அதனால், எந்த பள்ளியிலும்  சேர்க்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தனது மகளுக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். அதன் பின், தாசில்தார் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் குழந்தைக்கு சாதி, மதம் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நரேஷ் கார்த்திக் கூறியதாவது, 1973ம் ஆண்டே தமிழ்நாடு அரசே பள்ளியில்  சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என அரசாணை பிறப்பித்து இருந்தது. இருந்தாலும், உதவித்தொகை உள்ளிட்ட காரணங்களுக்காக சாதி சான்றிதழ் கேட்கின்றனர்.

சாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு நீங்கும். இதனாலேயே எனது மகளுக்கு சாதி, மதம் இல்லாத சான்றிதழ் வாங்க வேண்டும் என முடிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளேன். வேலைக்காக விண்ணப்பிக்கும்போது (no cast) என்ற பிரிவையும் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.