உதயநிதிக்கு அமைச்சர் பதவி: தீர்மானம் நிறைவேற்றிய அன்பில் மகேஷ்

முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட வேண்டும் என, அவ்வவ்ப்போது கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. மேலும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், அன்பில் மகேஷ் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின், 99 வது பிறந்த நாள் விழாவை, மாவட்ட அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.