மனிதனிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து கல்வி! – முதல்வர் ஸ்டாலின்

ஒரு மனிதரிடமிருந்து யாரும் பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே என தனியார் பள்ளி திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி கல்விக் குழுமத்தின் புதிய பள்ளி துவக்க விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி திராவிட அரசனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார். மேலும், மதிப்பெண் அடிப்படையில் எடை போடாமல் மாணவர்களின் தனி திறமையை கவனிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பேசுகையில்: நான் பிறந்து வளர்ந்த கோபாலபுரத்தில் டிஏவி பள்ளி முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்னையில் கடந்த 50 ஆண்டுகாலமாக கல்வி சேவையை வழங்கி வருகிறது டிஏவி பள்ளி என்றும், இதுபோன்ற பள்ளி, கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதாகவும் கூறினார்.

மாணவ, மாணவிகள் உண்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ வேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தாய்மொழி வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என குறிப்பிட அவர், பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.

ஒரு மனிதரிடமிருந்து யாரும் பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே. இருளில் இருந்து ஒளிக்கு கொண்டு செல்வது தான் கல்வி. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி கொடுத்துள்ளோம் எனக் கூறினார்.