பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி குறைப்பு – சைமா வரவேற்பு

ஸ்பாண்டெக்ஸ் நூல் மீதான குவிப்பு வரி நீக்கம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி குறைப்புக்கு சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சைமா தலைவர் ரவி சாம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது: எலஸ்டோமெரிக் நூல் இழை மீது விதிக்கப்பட்டிருந்த குவிப்பு வரியை நீக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோருக்கு தனது நன்றியினை தெரிவித்தார்.

டெனிம் உள்ளிட்ட ஆடைப் பொருட்களில் எலாஸ்டோமெரிக் இழை பயன்படுத்துவது மதிப்புக் கூட்டலை கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

குவிப்பு வரி நீக்கம், சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித் தொழிலுக்கு ஒரு சமதளத்தை உருவாக்கும். மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத உயர்தர எலாஸ்டோமெரிக் இழை நூல்களை நியாயமான விலையில் இறக்குமதி செய்ய முடியும்.

இந்நிலையில், பெட்ரோலின் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6 ஆகவும் குறைத்து, பெட்ரோல் விலையை ரூ.9.50 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.7 ஆகவும் குறைக்கும் முடிவினை சைமா வரவேற்கிறது.

ஜவுளித் தொழிலில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு அரசின் இந்த முடிவால், போக்குவரத்து செலவு குறையும் என்றும், இது ஜவுளித் தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போது எரிபொருளுக்கு மத்திய கலால் வரி குறைத்துள்ளதால், பருத்திக்கான போக்குவரத்து செலவு தமிழகம் போன்ற 95 சதவீத பருத்தியை இறக்குமதி செய்யும் மாநிலங்களுக்கு குறையும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மீதான சுங்க வரியை குறைத்தமைக்கும், மூலப்பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பு மற்றும் இரும்பு மற்றும் எஃகு மற்றும் அதன் மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்ததற்கும் அரசுக்கு சைமா தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் துணைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்க உதவும். இது விவசாயத்திற்கு அடுத்தபடியான நாட்டில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஜவுளி மற்றும் ஆடை தொழிலுக்கு மிகவும் பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.