பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 28 வது விளக்கேற்றும் விழா

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் 28வது விளக்கேற்றும் விழா நடைபெற்றது. விளக்கேற்றும் விழா என்பது கை விளக்கேற்றிய காரிகை பிளாரென்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூர்ந்து, அவரது வழிகளை பின்பற்றுவதற்கான நாள் ஆகும். மக்கள் நல்வாழ்வுக்காக மத, இன மற்றும் மொழி வேறுபாடு பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிய வேண்டும் என்று செவிலிய மாணவர்களுக்கு மேற்கோள் காட்டும் தினமாக விளக்கேற்றும் விழா திகழ்கிறது.

இவ்விழாவானது முதலாம் ஆண்டு செவிலிய மாணவ, மாணவிகள் முதன்முறையாக மருத்துவமனை சீருடையில் விளக்கேற்றி செவிலியத் துறையில் நுழைவதற்கான நிகழ்வாகும்.

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஜெயசுதா விழாவிற்கு தலைமை வகித்து வரவேற்புரை வழங்கினார். இவ்வருடத்தின் செவிலியர்கள் தினத்தின் கருப்பொருளான “உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் செவிலிய துறையை பாதுகாத்து, ஆதரித்து இத்துறையில் முதலீடு செய்ய வேண்டும்” என்று மேற்கோள் காட்டினார். பெற்றோர்களும், மாணவர்களும் செவிலிய கல்வியை தேர்ந்தெடுத்தற்காக பாராட்டினார். மேலும் உலகில் தற்போதுள்ள செவிலியர்களின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது என்றும், துறைரீதியாக மாணவ செவிலியர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். இன்று தொடங்கும் செவிலிய பயிற்சியானது, செவிலிய துறையின் மரபுகளை போற்றுவதற்கும், நிலைநிறுத்துவதற்கும் இன்றியமையாததாகும் என ஊக்கப்படுத்தினார். மேலும் மாணவர்கள் ஒளியைப்போல பிரகாசித்து, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுரைத்து வாழ்த்துரையாற்றினார்.

பி.எஸ்.ஜி செவிலிய கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் துணை செவிலிய கண்காணிப்பாளர்கள் மூலம், 100 முதலாம் ஆண்டு செவிலிய மாணவர்களுக்கு தீப ஒளியை வழங்கினர். தொடர்ந்து, பி.எஸ்.ஜி மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் அனுராதா தலைமையில் செவிலிய மாணவர்கள் உறுதிமொழியை ஏற்றனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் முன்னாள் செவிலியர் கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் சுந்தரி எட்வின் விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களை வரவேற்று விளக்கேற்றும் விழா மற்றும் தீபத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இத்துடன் செவிலியர்களுக்கான குணநலன்களை பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார். கருணையுள்ள இதயம், நுண்ணறிவு மற்றும் திறமையான பயிற்சியோடு ஒருங்கிணைந்து செயல்படுதல் மூலம் நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு வழங்குவதைப் பற்றி விவரித்தார். மாணவர்கள் உற்சாகம் மற்றும் நேர்மறையான மனப்பான்மையுடன் விடாமுயற்சியோடு இருப்பதன் மூலம், இத்துறையில் மேன்மேலும் முன்னேற்றமடைய வேண்டுமென்று வாழ்த்தினார்.