தொடங்குகிறது பருவமழை!

இந்த ஆண்டு வழக்கத்துக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளாவில் மழை பொழியத் தொடங்கியிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் சில முறை தான் இவ்வாறு முன்னதாக மழை பொழியத் தொடங்கியிருக்கிறது. பலமுறை இந்த தென்மேற்கு பருவமழை நம்மை அண்ணாந்து ஏக்கமாக வானத்தைப் பார்க்க வைத்திருக்கிறது. ஜூன் ஒன்றில் தொடங்கும் என்று வானிலை அறிக்கை சொன்னாலும், 10 நாள், 15 நாள் தாண்டி மழை தொடங்கியதும் உண்டு. அப்படியே சும்மா தலையை காட்டி விட்டு காணாமல் போனதும் உண்டு. இந்த ஆண்டு வழக்கமான மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். காத்திருந்து பார்ப்போம்.

முன்பெல்லாம் இது பற்றி விவசாயிகள் தான் கவலைபடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் நாம் அனைவருமே கவலைப்படும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. அதற்கு காரணம் முதலில் குடிநீர். அந்த அளவு குடிநீர் கேன் விற்பனை நடக்கின்றது. பிறகு விவசாயத்திற்கு நீர்  தேவைப்படுகின்றது.

இது போக, கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் ஒருபுறம் காத்திருக்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு ஏறிவரும் விலைவாசி இந்த ஆண்டு இந்தியாவில் உச்சம் தொட்டு இருக்கிறது. 15 சதவீதம் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாய பொருளாதாரம் தான். இந்திய விவசாயம் என்பது பெரும்பாலும் இந்த பருவக்காற்றின் சூதாட்டம் தான் என்று சொல்ல வேண்டும். இன்னொரு பக்கம் பெருகி வரும் மக்கள் தொகைக்கும் நகரமயமாதலுக்கும் தேவையான நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.எடுத்துக்காட்டாக கோவை நகரில் சிறுவாணி குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் பொழுது மக்கள் தொகை சுமார் 50,000 மட்டுமே. இன்று 15 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. அதாவது 30 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்காக 30 மடங்கு அதிக நீர் தரும் அளவுக்கு சிறுவாணி அணையை நாம் உருவாக்க முடியுமா?  சிறுவாணி போதாதென்று அத்திக்கடவு ஒன்று, இரண்டு, மூன்று என்று குடிநீர் திட்டங்கள் போய்க்கொண்டே இருக்கின்றன. வெறும் குடிநீர் தேவைக்காக மட்டுமே பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படுகிறது.

அதன் பிறகு வீட்டு பயன்பாடு, தொழிற்சாலைகள் பயன்பாடு, மற்றபடி விவசாய பயன்பாடு என்று தண்ணீரின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனை ஈடுகட்ட ஒருபுறம் ஆழ்துளை கிணறுகள் போட்டு கொண்டே இருக்கிறோம். எது எப்படியானாலும் நமக்கான முக்கியமான நீராதாரம் என்று பார்த்தால் பருவமழை தான் நமக்கு நீராதாரம். அந்த மழை நீரை சரியான முறையில் சேமித்து பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

நமது பொலிவுறு நகரமான கோவைக்கு இந்த பருவமழையால் இன்னொரு தாக்கமும் உள்ளது. கோவை நகரின் சாலைகள், மழை நீர் வாய்க்கால்கள் எல்லாம் ஏற்கனவே “ஒரு மாதிரியாகத்தான்” இருக்கின்றன. இருக்கின்ற பள்ளங்களையும், குழிகளையும் தாண்டித் தாண்டி சர்க்கஸ் செய்த படிதான் மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இடுப்புவலி, தோள்பட்டை வலி இல்லாத வாகன ஓட்டிகளே இல்லை எனும் அளவுக்கு நகரத்தின் சாலைகள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. கூடவே குடிநீர்ப் பணிகள் போன்றவற்றுக்காக தோண்டிய குழிகள் ஒருபுறம் காத்திருக்கின்றன. மழை வந்தவுடன் இவை எல்லாம் நம்மை வரவேற்க காத்திருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்வான பகுதிகளில் குறிப்பாக மேம்பாலம் பகுதியில் தேங்கும் நீரை அகற்றுவதற்கு இன்னும் சரியான ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. சின்னதாக ஒரு மழை வந்தாலும் கோவைதெற்கு, வடக்கு என்று தொகுதிகள், கிழக்கு மேற்காக பிரிந்துவிடும். மக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. 110 ரூபாய் என்ற குறைந்த விலையில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் மழையில் மெல்ல மெல்ல ஊர்வலமாக செல்வது கண்கொள்ளாக் காட்சியாக நடந்தேறும்.

சளி, காய்ச்சல் போன்றவை சாதாரணமாக மழைக் காலத்தில் இங்கு விஜயம் செய்பவை. கூடவே இந்த முறை விட்ட குறை தொட்ட குறையாக கொரோனா வைரஸ், டெங்கு போன்றவையும் வரக்கூடும். அதையும் நாம் எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

எனவே பருவமழை என்பது மழை நீரோடு, பல நல்லதையும் இல்லாததையும் கொண்டுவரும் என்பதே உண்மை.  நமது பொருளாதாரத்தின் முக்கிய சக்கரமே இந்த பருவ மழைதான். இதனை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். முக்கியமாக உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்து வரும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நீரை வீணாக்காமல் சேமித்து பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஆண்டு முழுவதும் இந்த பருவ மழை நீரை நாம் பயன்படுத்த முடியும். வான் மழை நீரை மனதார வரவேற்போம்!