கோவையில் 150 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு கோவை மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.

அதன்படி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5239 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 48,039 நபர்கள் எழுத உள்ளனர். காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு நடத்துவதற்காக 60 மொபைல் அலுவலர்கள், 300 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வருபவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.