கே.பி.ஆர் கல்லூரியில் விளையாட்டு விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், உடற்கல்வி துறை சார்பாக விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.

கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைகளின் மூலம் தங்கள் தனித்திறனைக் காட்சிப்படுத்தினர்.

இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனுசாமி விளையாட்டுத்துறையின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

இந்நிகழ்விற்கு அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் ICF, மிஸ்டர் வேர்ல்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்: மாணவர்கள் கல்விக்கு மட்டுமன்றி விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் விளையாட்டின் மூலம் மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயலும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.