கோவைக்கு ‘மாஸ்டர் பிளான்’ உருவாக்கப்படும் – தொழில்துறை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

கோவை வருகை புரிந்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் தொழில்முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை ஒவியங்களின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து கோவையில் தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை எனக் கூறிய அவர், ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரமாக கோவை உள்ளது என்றார். கோவையை மேலும் மேம்படுத்த மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும்.

கோவை மாவட்டம் தமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரமாக திகழ்வதோடு, உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்குகிறது.

பாரதியார் பல்கலைகழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும். சென்னைக்கு நிகராக கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும். கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவையில் புதிய பெருந்திட்டம் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது. அரசு தனது லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம் எனக் கூறினார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மதியம் அரசு விருந்தினர் மாளிகையில் உணவருந்தி விட்டு மாலையில், சாலை மார்க்கமாக நாளை நடைபெற இருக்கும் ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைக்க செல்கிறார்.