மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவும் யோகா!

– டாக்டர்‌.ஆர்.வி. கல்லூரியில் விழிப்புணர்வு

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் யோகா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தொடங்கி வைத்தார். கோவை, இந்திய யோகா பள்ளி மற்றும் சிகிச்சை மையத்தின் இயக்குனரும் ஆசிரியருமான சுப்ரமணியன் காந்தி, கோவை யோகா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அப்புக்குட்டி, கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீ ஆனந்த சாய் யோகா மையத்தின் பயிற்சியாளர் மற்றும் தற்காப்பு பயிற்சியாளர் கவியரசு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ‘யோகா சிகிச்சையின் முக்கியத்துவங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

அவர்கள் பேசுகையில்: மனிதனின் உடல், மனம், ஆன்மா இவை மூன்றையும் ஒன்று படுத்துவதுதான் யோகா பயிற்சி. நமக்குள் நம்மை பார்ப்பது தான் யோகா. ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்கிறார் திருமூலர். அவர் வாக்கிற்கு இணங்க உடம்பை வளர்ப்பது பெரிதல்ல அதற்குள் உள்ள உயிரை வளர்க்க வேண்டும். அதற்காக நம்மை நாம் சீர்படுத்திக் கொள்வது அவசியம்.

ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் ஒதுக்கி நம் உடல், மனம் செம்மையுற யோகா பயிற்சி செய்ய வேண்டும். மனம் ஒரு குரங்கு போல தாவிக்கொண்டே இருக்கும். மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். யோகா பயிற்சி செய்ய சுமார் மூவாயிரம் ஆசனங்கள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு சில ஆசனங்கள் செய்வதன் மூலம் நுரையீரல் பிரச்சனைகள், சர்க்கரை நோய், இதய நோய், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், கண், காது தொடர்பான நோய்கள், சுவாசப் பிரச்சனைகள், தீவிர தலைவலி, உணவு செரிக்காதிருத்தல் போன்றவற்றை தீர்க்க முடியும்.

துரித உணவு வகைகளை தவிர்த்து, சத்தான உணவு வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில், யோகாவில் சர்வதேச அளவில் வெற்றி பெற்ற கோவை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி நேகா மற்றும் வித்ய விகாஷினி பள்ளி மாணவி ஷிவானி ஆகியோர் கலந்துகொண்டு பிரணாயாம பயிற்சி, வஜ்ராசனம், ஏகபாதாசனம், பத்மாசனம், அர்த்த சிரசாசனம், நமஸ்கார முத்திரை, ஹாக்னி முத்திரை ஆகியவற்றை செய்து காட்டினர்.